அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை

by Staff Writer 19-07-2019 | 3:47 PM
Colombo (News 1st) மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முதலாவது பிரதிவாதியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறு சட்ட மா அதிபர் , மூவரடங்கிய விசேட நிரந்தர மேல் நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். முறிகள் மோசடி தொடர்பில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அறிந்தும், வேண்டும் என்றே அவர் நீதிமன்றத்தை புறக்கணிப்பதாகத் தெரிவித்து, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன்ன இந்த கோரிக்கையை இன்று முன்வைத்துள்ளார். முறிகள் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மூவரடங்கிய விசேட நிரந்தர மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே, விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, வழக்கின் பிரதிவாதிகள் 7 பேர் இன்று மன்றில் ஆஜராகியிருந்தனர். இதன்போது, பிரதிவாதிகளுக்கு எதிராக மன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும், தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டிலும் செல்வதற்கு பிரதிவாதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சரீரப் பிணை வழங்கும் இருவரில் ஒருவர், குடும்பத்தின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.