சீரற்ற வானிலையால் 8 பேர் பலி: 30 படகுகள் மாலைத்தீவில் கரையொதுங்கின

சீரற்ற வானிலையால் 8 பேர் பலி: 30 படகுகள் மாலைத்தீவில் கரையொதுங்கின

எழுத்தாளர் Staff Writer

19 Jul, 2019 | 3:39 pm

Colombo (News 1st)  சீரற்ற வானிலை காரணமாக 8 மாவட்டங்களை சேர்ந்த 4,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் 8 வீடுகள் முழுமையாகவும் 703 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

அக்கரப்பத்தனை – டொரிங்டன் தோட்டத்தில் ஆற்றில் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமற்போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் சடலம் மன்றாசி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, நேற்று மீட்கப்பட்ட சிறுமியின் சடலமும் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு சடலங்கள் தொடர்பிலும் நீதவான் விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

பாடசாலைக்கு சென்று திரும்புகையில் டொரிங்டன் தோட்டத்திலுள்ள ஆற்றைக் கடக்க முயன்ற போது இரண்டு சிறுமிகளும் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 வயதான சிறுமிகளே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஹட்டன் கினிகத்தேன நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கினிகத்தேன – நாவலப்பிட்டி வீதியிலுள்ள 10 கடைகள் நேற்றிரவு தாழிறங்கியுள்ளன. அவற்றில் ஒரு கடையின் உரிமையாளர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஹட்டன் பகுதியை சேர்ந்த 60 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வர்த்தகரின் சடலம் கினிகத்தேன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கினிகத்தேன பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கண்டி உளுகங்கை நகரில் இருந்து அலகொல்ல செல்லும் வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

உளுகங்கை நகரில் விற்பனை நிலையங்களுக்குள் வௌ்ள நீர் உட்புகுந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கண்டி – தவளந்தென்ன பகுதியில் பெய்த கடும் மழையினால் மரமொன்று முறிந்து மின்சார கம்பி மீது வீழ்ந்துள்ளது.
இதனால் தவளந்தென்ன பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அக்கரப்பத்தனை மன்றாசி பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் – நோர்வூட் பகுதியிலும் நேற்றிரவு முதல் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, கண்டி, களுத்துறை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை இன்று மாலை வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதனால் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இரத்தினபுரி பகுதியில் களுகங்கையினால் ஏற்பட்ட வௌ்ளம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடற்பிராந்தியங்களில் வீசும் பலத்த காற்று காரணமாக இலங்கையை சேர்ந்த சுமார் 30 நீண்டநாள் ஆழ்கடல் படகுகள் மாலைத்தீவு கடல் எல்லைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த படகுகள் மாலைத்தீவு கரைக்கு செல்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் பத்மபிரிய திசேர குறிப்பிட்டுள்ளார்.

கடலலையில் சிக்குண்டு சென்றுள்ள படகுகளுடன் தொடர்புகளை பேணி வருவதாகவும், படகிலுள்ளவர்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக படகுகள் விபத்திற்குள்ளாகியுள்ளனவா என்பது குறித்து கடற்படையினருடன் இணைந்து சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

251 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி அங்கு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எல்பொட பகுதியில் 229 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், காசல் ரீ பகுதியில் 202 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் கெனியன் பகுதியில் 248 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் இன்றும் 150 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதுடன், நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்