மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் நான்காவது கட்டம் ஆரம்பம்

by Staff Writer 18-07-2019 | 8:50 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் நான்காவது கட்டம் இன்று மீண்டும் ஆரம்பமானது. நான்கு மாவட்டங்களுக்கு சென்றுள்ள நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர், பேராதனை பல்கலைக்கழக நிபுணர்களின் ஒத்துழைப்புடன் மக்களின் பிரச்சினைகளை ஆராய்கின்றனர். மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் நான்காம் கட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - வீரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற வழிபாடுகளின் பின்னர் மக்கள் சக்தி குழுவினர் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது, அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வரும் பல குடும்பங்களை மக்கள் சக்தி குழுவினர் சந்திக்க நேரிட்டது. இதேவேளை, மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் மற்றுமொரு குழுவினர் யாழ்ப்பாணத்தின் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மணற்காடு மற்றும் தாளையடி பகுதிகளுக்கு சென்று மக்களின் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். தாளையடி பகுதிக்கு சென்ற குழுவினர் அங்குள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தனர். இந்த பிரதேச மக்களின் பிரதான ஜீவனோபாய மார்க்கம் கடற்றொழிலாகும். கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் சுருக்கு வலைகளுக்கான அனுமதி மீள் புதுப்பித்து வழங்கப்படாமையால், தொழிலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதிக்கு சென்ற மக்கள் சக்தி குழுவினர் மக்களின் வீட்டுத்திட்டம் தொடர்பிலான பிரச்சினை குறித்து கவனம் செலுத்தியிருந்தனர். இங்கு சுமார் 15 குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசிக்கின்றனர். 25 மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில், மக்கள் சக்தி குழுவினர் களுத்துறை, மாத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து தமது பயணத்தை ஆரம்பித்தனர். ஹொரணை - வெவல இசிபதனாராம விஹாரையில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களுடன் பயணத்தை ஆரம்பித்த குழுவினர், புலத்சிங்கள - பாலிந்தநுவர கிராமத்திற்கு சென்றனர். போக்குவரத்து வசதிகள் இன்மை மற்றும் உரிய வீதி கட்டமைப்பு இன்மையே இக்கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளாகும். அதனைத் தொடர்ந்து ரத்சிறிகம கிராமத்திற்கு மக்கள் சக்தி குழுவினர் பயணித்தனர். சுகாதார வசதிகளற்ற கிராமங்களுக்குள் ரத்சிறிகமவும் அடங்குகின்றது. தம்புள்ளை - ஹபரத்தவல ஶ்ரீ சம்போதி விஹாரையில் இடம்பெற்ற மத அனுஷ்டானங்களின் பின்னர் மற்றுமொரு குழுவினர் தமது பயணத்தை ஆரம்பித்தனர். களுத்துறை, மாத்தளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள கிராமங்களுக்குச் சென்று மக்கள் சக்தி குழுவினர் நாளைய தினமும் பிரச்சினைகளை ஆராயவுள்ளனர்.