நீரில் அள்ளுண்டு சென்ற சிறுமியின் சடலம் மீட்பு

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு: ஆற்று நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட சிறுமிகளில் ஒருவரின் சடலம் மீட்பு

by Staff Writer 18-07-2019 | 10:05 PM
Colombo (News 1st) அக்கரப்பத்தனை - டொரிங்டன் தோட்டத்தில் ஆற்று நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட இரண்டு சிறுமிகளில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றுமொரு சிறுமியைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இன்று பிற்பகல் 3.30 அளவில் இரண்டு சிறுமிகளும் ஆற்றில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர். 11 வயதான இரண்டு சிறுமிகளே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் ஒரு சிறுமி இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாடசாலைக்கு சென்று வீடு திரும்புகையிலேயே அவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர். நாட்டின் தென் மேற்கு பகுதிகளில் பெய்யும் அதிக மழை காரணமாக களுகங்கை மற்றும் களனி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. பலத்த மழை காரணமாக லக்சபான, கெனியன் மற்றும் மேல் கொத்மலை நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. லக்சபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப்பகுதிகளில் வாழ்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று காலை 8.30 முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் கண்டி, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இரத்தினபுரி - குடவ பகுதியில் 176 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி - வேவல்வத்த வீதி பகுதிக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட நிபுணர் கலாநிதி வசந்த சேனாதீர குறிப்பிட்டார். மலையகத்தில் நிலவும் பலத்த மழை காரணமாக ஹட்டன் - கொட்டகலை பகுதியில் பல வீடுகளுக்குள் வௌ்ளம் புகுந்துள்ளது. கொட்டகலையிலுள்ள சில தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனிடையே களுகங்கையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இன்று மாலை 3 மணியளவில் களுகங்கையின் நீர்மட்டம் 6 மீட்டர் உயரத்திற்கு பதிவாகியிருந்ததாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்றும் 150 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்