சீதைக்கு ஆலயம்: காங்கிரஸ்-பாஜக இடையில் விவாதம்

இலங்கையில் சீதை அம்மன் ஆலயம் அமைப்பது தொடர்பில் காங்கிரஸிற்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் வாதப்பிரதிவாதம்

by Staff Writer 18-07-2019 | 4:57 PM
Colombo (News 1st) இலங்கையில் புதிதாக சீதை அம்மன் ஆலயமொன்றை அமைப்பது தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் வௌியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டில், அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் புதிய சீதை அம்மன் ஆலயமொன்றை அமைக்க பாரதிய ஜனதா கட்சி தீர்மானித்திருந்தது. இந்நிலையில், சீதை இலங்கைக்கு உண்மையிலேயே கடத்திச் செல்லப்பட்டாரா என்பது தொடர்பில் தற்போது ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தற்போதைய அரசாங்கம் மீது குற்றம் சுமத்தி மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உலகறிந்த நம்பிக்கைகளை சிதைக்கும் வகையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சீதை ஆலயமொன்றை அமைப்பது தொடர்பில் மத்திய பிரதேஷின் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹானினால் எவ்வித நடவடிக்கையும் அவரது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்படவில்லை என இதற்கு பதிலளித்த இந்திய பொது விவகார அமைச்சர் பி.சி. ஷர்மா தெரிவித்துள்ளார். ஆலயம் தொடர்பில் பேசி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக இந்திய பொது விவகார அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.