வௌிநாட்டுக் கழிவுகள் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டுள்ளமை உறுதியானது

by Staff Writer 17-07-2019 | 8:50 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின் காணியில் காணப்படும் கழிவுகளை, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் இன்று சோதனையிட்டனர். 2013ஆம் ஆண்டில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பயன்படுத்தி, அந்த நிறுவனம் 2017ஆம் ஆண்டிலிருந்து 130 கொள்கலன்களை இறக்குமதி செய்துள்ளமை மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையூடாக தெரியவந்துள்ளது. அவற்றுள் 57 கொள்கலன்கள் மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன், கழிவுகள் அடங்கிய 72 கொள்கலன்கள் தொடர்ந்தும் கட்டுநாயக்கவில் காணப்படுகின்றன. நாட்டில் நடைமுறையிலுள்ள சுற்றாடல் சட்டத்திற்கமைய கழிவுகளைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறாயின், கட்டுநாயக்கவில் காணப்படும் கழிவுகளை இறக்குமதி செய்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், பின்னடைவு காரணமாக கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறி மீண்டும் அனுப்புவது பொருத்தமானதா? இந்நிலையில், கொழும்பு துறைமுகத்தின் CICD முனையத்தில் தரையிறக்கப்பட்டுள்ள மேலும் 102 கொள்கலன்களை பரிசோதிப்பதற்காக அவை சுங்கத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில கொள்கலன்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், மெத்தைகளைக் கொண்டுவரும் போர்வையில் கழிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்கம் குறிப்பிட்டது. 2018ஆம் ஆண்டில் இலங்கைக்கு கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணத்தில் மெத்தைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய நிறுவனமொன்றினால் இவை இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன. எனினும், அந்தப் பெயருடைய நிறுவனம் தொழிற்படவில்லை என்பது தெரியவந்தது. மெத்தைகளைக் கொண்டுவரும் போர்வையில், இந்தக் கழிவுகள் எடேரமுல்ல பகுதி முகவரியுடைய நிறுவனத்தின் பெயரில் கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும், அந்த முகவரியில் அவ்வாறான நிறுவனமொன்று இல்லை. இந்தப் பொருட்களைக் கொண்டு வந்தவர்களாக நாட்டின் முன்னணி நிறுவனமொன்றின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் கழிவுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் நாம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளோம். இவ்வாறான நிலையில், வௌிநாட்டிலிருந்து கழிவுகளைக் கொண்டுவரும் இந்த முன்னணி நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்கள் யார்? அந்த நிறுவனத்தை தவறாக வழிநடத்தி இந்தக் கடத்தலை முன்னெடுத்துள்ளனரா? இவற்றைக் கொண்டுவருவதற்கு முன்நின்ற நிறுவனம் நேர்மையாக செயற்படுவதாயின், இந்தக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதன் பின்புலத்தின் உண்மைத் தகவல்களை மூடி மறைக்காமல், சட்ட நடவடிக்கை எடுக்கும் நிறுவனத்திற்கு அவற்றை வழங்க வேண்டுமல்லவா? அவ்வாறு இடம்பெறாத பட்சத்தில், மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள குறித்த நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் வௌிப்படுத்துவதற்கு நியூஸ்ஃபெஸ்ட் பின்நிற்கப்போவதில்லை.