மகா சங்கத்தினரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

மகா சங்கத்தினரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஜனாதிபதி

by Staff Writer 17-07-2019 | 9:21 AM
Colombo (News 1st) எந்தப் பதவி நிலைகளில் உள்ளவர்களாயினும் மகா சங்கத்தினரை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெலெந்த ரஜமஹா விகாரயைில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை சுட்டிக்காட்டியுள்ளார். இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் மகா சங்கத்தினரை விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயம் குறித்து தாம் ஊடகங்களின் வாயிலாக அறிந்துகொண்டதாகவும் அவ்வாறு மகா சங்கத்தினரை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதனைக் கடுமையாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை, மத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்பான அனைவரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டிற்கு வௌியே உள்ளவர்களுக்கு சர்வதேச பிடியாணை பிறக்கப்பட்டுள்ளதுடன் அர்ஜூன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக தாம் சிங்கப்பூர் பிரதமருடன் தனிப்பட்ட வகையில் கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, ஏப்ரல் 21ஆம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களுக்கு எதிரான தௌிவான சாட்சிகள் உள்ளதாகவும் சட்டத்திற்கு அமைவாக அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.