பொலிஸ் ஆணைக்குழு செயலரின் முன்பிணை மனு நிராகரிப்பு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்கவின் முன்பிணை மனு நிராகரிப்பு

by Staff Writer 17-07-2019 | 2:04 PM
Colombo (News 1st) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க தாக்கல் செய்த முன்பிணை மனுவை, கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (17) நிராகரித்துள்ளது. கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதோ இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவன்கார்ட் மெரிடைம் சர்விஸ் நிறுவனத்தால் காலி கடலில் முன்னெடுக்கப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பில் தம்மைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபரால், பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமையால், தனக்கு முன்பிணை வழங்குமாறு சமன் திசாநாயக்க மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். சமன் திசாநாயக்க உள்ளிட்ட 8 பிரதிவாதிகளைக் கைதுசெய்து, துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவர்களை காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபரால், பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடந்த 7ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. அதற்கமைய, கடந்த 8ஆம் திகதி சமன் திசாநாயக்க கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.