சமூக வலைத்தளம் ஊடாக மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

சமூக வலைத்தளம் ஊடாக மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2019 | 9:05 pm

Colombo (News 1st) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸ் ( Alaina B. Teplitz) இன்று சமூக வலைத்தளம் ஊடாக மக்களின் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.

திருகோணமலையையும் கொழும்பையும் இணைக்கும் வகையில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொருளாதார வலயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த தூதுவர், MCC எனப்படும் Millennium Challenge Corporation இணக்கப்பாடு அபிவிருத்தி ஒத்துழைப்பிற்கான ஒன்று மாத்திரமே என கூறியுள்ளார்.

MCC இணக்கப்பாடுகள் ஊடாக போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கும் காணி உரிமைகள் தொடர்பிலான சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

நாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது இந்த பிரச்சினைகளைத் தவிர்ந்த, மக்களை மிகவும் பாதிக்கும் மேலும் பல சவால்கள் உள்ளதென சுட்டிக்காட்டி அமெரிக்க தூதுவரிடம் கேள்வியொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த கேள்விக்கு பதிலளித்துள்ள அமெரிக்க தூதுவர் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டத்திற்காக 40 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி கடனாக அல்லாது அமெரிக்க ஒத்துழைப்பு திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் கொடையாக அமையும் எனவும் அலைனா கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான நேரடி பதில்கள் தூதுவரால் முன்வைக்கப்படுவதைக் காண முடியவில்லை.

தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வதந்திகள் பரப்பப்படுவதாக அமெரிக்க தூதுவர் இதன்போது தொடர்ச்சியாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் ஆராயும்போது, அரசாங்கத்தை தவறாக வழிநடத்த முடிந்தாலும் நாட்டு மக்களை அவ்வாறு ஏமாற்ற முடியாதென்பது புலப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்