நியூஸிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல

நியூஸிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர்

by Bella Dalima 16-07-2019 | 4:27 PM
உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் போராடி வீழ்ந்த நியூஸிலாந்து, தோல்விக்கு தகுதியான அணி அல்ல என்று இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடந்த 12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 50 ஓவரில் 241 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனதால் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தது. இதையடுத்து, சுப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 15 ஓட்டங்களை எடுத்தது. 16 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய நியூஸிலாந்தும் 15 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் சுப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து, இரு அணிகளும் பெற்றுக்கொண்ட பவுண்டரிகள் கணக்கிடப்பட்டன. இதில் இங்கிலாந்து 26 பவுண்டரிகளும் நியூஸிலாந்து 17 பவுண்டரிகளும் அடித்திருந்தன. நியூஸிலாந்தை விட இங்கிலாந்து அதிக பவுண்டரிகள் பெற்றிருந்ததால் கோப்பையைக் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதில் 4 ஆவது பந்தில் பென் ஸ்டோக்ஸ் 2 ஆவது ரன்னுக்கு ஓடினார். அப்போது மார்ட்டின் குப்தில் எறிந்த பந்து பென் ஸ்டோக்ஸ் மட்டையில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இதையடுத்து, நடுவர் இங்கிலாந்திற்கு 6 ஓட்டங்களை வழங்கினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. நடுவர் 5 ஓட்டங்களை மட்டுமே வழங்கியிருக்க வேண்டும் என்று முன்னாள் நடுவர், வீரர்கள் கருத்து தெரிவித்தனர். இதேபோல், பவுண்டரிகளைக் கணக்கிட்டு இங்கிலாந்திற்கு கிண்ணத்தை வழங்கியதையும் முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர். இந்த நிலையில், நியூஸிலாந்து அணியை இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் பாராட்டியுள்ளார்.
இறுதிப் போட்டியில் விளையாடிய இரு அணிகளும் தோல்விக்கு தகுதியான அணிகள் அல்ல. அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்திற்கு பாராட்டுக்கள். அவர்கள் தோல்விக்கு தகுதியானவர்கள் அல்ல. இந்த தோல்வியை அவர்கள் ஏற்றுக்கொண்டது மிகவும் கடினமானது. கிரிக்கெட்டில் மறக்க முடியாத போட்டியாக இது அமைந்தது என்று கூற விரும்புகிறேன். இது போன்று நடக்கும் என்று நம்பவில்லை. 50 ஓவர் முடிவில் ஆட்டம் ‘டை’ ஆனபோது ஒருவித விரக்தி ஏற்பட்டது. அதன்பின் பவுண்டரி எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்ததால் அந்த உணர்ச்சிகள் அனைத்தும் கடந்து சென்று விட்டன.
என்று ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.