மத்திய கிழக்கு பதற்றம்: ஜனாதிபதிகள் இடையே பேச்சு

அமெரிக்க, ஈரானிய, ரஷ்ய ஜனாதிபதிகளுடன் பிரெஞ்ச் ஜனாதிபதி பேச்சுவார்த்தை

by Chandrasekaram Chandravadani 16-07-2019 | 12:25 PM
Colombo (News 1st) மத்திய கிழக்கில் பதற்றநிலை அதிகரிப்பதைத் தடுக்கும் முயற்சியாக ஈரானிய, அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக, பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார். ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் ஆகியோருடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக, இமானுவேல் மெக்ரோன் கூறியுள்ளார். ஈரானில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக மெக்ரோன் மேலும் குறிப்பிட்டுள்ளார். சேர்பிய ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இடம்பெற்ற இருதரப்பு ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த விடயம் தொடர்பில் பிரெஞ்ச் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பிரான்ஸ், ஈரான் இரட்டைக் குடியுரிமையாளரான பரிபா அதெல்ஹா தொடர்பில் தமக்கு எவ்வித விளக்கங்களும் கிடைக்கப் பெறவில்லை எனவும் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆராய்ச்சியாளரான பரிபா அதெல்ஹா கடந்த ஜூன் மாதம் ஈரானில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.