உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது இங்கிலாந்து அணி

உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது இங்கிலாந்து அணி

உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது இங்கிலாந்து அணி

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2019 | 7:00 am

Colombo (News 1st) கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து, 44 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

இறுதிப்போட்டி சமநிலையடைந்த நிலையில் சுப்பர் ஓவர் வீசப்பட்டு, அதுவும் சமநிலையை அடைய பவுன்டரிகளின் அடிப்படையில் நியூஸிலாந்தை வீழ்த்தி, இங்கிலாந்து அணி முதல் தடவையாக உலக சம்பியனாகழயுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று (14ஆம் திகதி) நடைபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டங்களை பெற்றது.

இதேவேளை, நேற்றைய போட்டியில் ஒரு ஓட்டத்தைப் பெற்றதன் மூலம் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரொன்றில் அதிகூடிய ஓட்டங்களை குவித்த அணித்தலைவராக கேன் வில்லியம்சன் பதிவாகியுள்ளார்.

அவர் இவ்வருடத் தொடரில் 578 ஓட்டங்களைக் குவித்து இந்த சாதனையை எட்டியுள்ளதுடன், 2007ஆம் ஆண்டு இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன இதற்கு முன்னர் இந்த சாதனையை படைத்திருந்தார்.

242 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாட களமிறங்கிய இங்கிலாந்து 86 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்களையும் இழந்து தடுமாற்றமடைந்தது.

எனினும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜொஸ் பட்லர் ஜோடி, ஐந்தாவது விக்கெட்காக 110 ஓட்டங்களை பகிர்ந்து இங்கிலாந்துக்கு வெற்றியின் மீதான நம்பிக்கை உருவாக்கியது.

ஜொஷ் பட்லர் 06 பவுன்டரிகளுடன் 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இறுதி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்காக 15 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

2 விக்கெட்கள் மாத்திரமே எஞ்சியிருந்த நிலையில் கடைசி ஓவரை நியூஸிலாந்து சார்பாக ட்ரன்ட் போல்ட் வீசினார்.

முதல் 2 பந்துகளையும் ஓட்டமன்ற பந்துகளாக ட்ரன்ட் போல்ட் மாற்றினார்.

மூன்றாவது பந்தில் பென் ஸ்டோக்ஸ் சிக்சரொன்றை விளாசி போட்டியின் விறுவிறுப்பை அதிகரித்தார்.

நான்காவது பந்தில் மீண்டும் பென் ஸ்டோக்ஸ் இரண்டு ஓட்டங்களை பூர்த்திசெய்த நிலையில் நியூஸிலாந்து வீரர்கள் களத்தடுப்பில் இழைத்த தவறுதலால் இங்கிலாந்துக்கு மேலும் 4 ஓட்டங்கள் கிடைத்தது.

அடுத்த பந்தில் விக்கெட் வீழ்த்தப்பட, இறுதிப் பந்தில் இங்கிலாந்தின் வெற்றிக்காக இரண்டு ஓட்டங்கள் தேவைப்பட்டன.

இறுதிப் பந்தை எதிர்க்கொண்ட பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது ஓட்டத்தைப் பூர்த்திசெய்த முடியாமல் ரன்ட் அவுட் ஆனார்.

இதனால் போட்டி சமநிலையை எட்டியதுடன் வெற்றியைத் தீர்மானிக்க சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

இங்கிலாந்து சார்பாக அந்த சந்தர்ப்பத்தில் பென் ஸ்டோக்ஸ் 84 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

மீண்டும் சுப்பர் ஓவரில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ஓட்டங்களைப் பெற்றது.

வெற்றிக்காக 16 ஓட்டங்கள் தேவையான நிலையில் மீண்டும் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியால் ஒரு சிக்ஸருடன் 15 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

கிரிக்கெட் விதிமுறைகளின்படி, இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்தப்போட்டியில் அதிக பவுன்டரிகளை விளாசி அணியே வெற்றி பெற்றதாகத் தீர்மானிக்கப்படும்.

இந்தப்போட்டியில் இங்கிலாந்து 26 பவுன்டரிகளை விளாசியதுடன், நியூஸிலாந்து 17 பவுன்டரிகளை விளாசியிருந்தது.

அதன்படி கனவான்களின் விளையாட்டை உலகுக்கு அறிகமுகப்படுத்திய இங்கிலாந்து வரலாற்றில் முதல் தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்