உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கமே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மார்க்கம் – ஜனாதிபதி

உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கமே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மார்க்கம் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2019 | 9:23 pm

Colombo (News 1st) உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கமே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே மார்க்கம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல வசதிகளையும் கொண்ட புதிய மாவட்ட வைத்தியசாலையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (15) இடம்பெற்றது.

நெதர்லாந்து அரசாங்கத்தின் 7 பில்லியன் ரூபா கடனுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலை, 600 கட்டில்களைக் கொண்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சத்திர சிகிச்சைக்கூடம், தீவிர சிகிச்சைப்பிரிவு, வௌிநோயாளர் பிரிவு மற்றும் குருதிமாற்று சிகிச்சை நிலையம் என்பனவற்றைக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5 மாதங்களில் புதியதொரு அரசாங்கத்தை உருவாக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் என அவர் இதன்போது கூறியுள்ளார்.

இதன்போது தூய்மையான, மனிதநேயமிக்க நாட்டை நேசிக்கும் ஊழல் மோசடியற்ற உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கத்தை உருவாக்குவதற்கு மக்கள் தமது வாக்குப் பலத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்துவரும் பொருளாதாரக் கட்டமைப்பையும் ஊழல் மோசடி மிகுந்த தூய்மையற்ற அரசியலைக் கொண்ட இந்நாட்டினை கட்டியெழுப்புவதற்கான ஒரேயொரு மார்க்கம், உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பங்கு வகிக்கும் அரச சேவையாளர்கள் மற்றும் புத்திஜீவிகள், தமது கடமையை சரிவர நிறைவேற்றுமிடத்து நாட்டில் அபிவிருத்தி என்பது சவாலானதொரு விடயமாக அமையாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்காக முன்னொருபோதும் நிறைவேற்றப்படாத வேலைத்திட்டங்கள் கடந்த 5 வருடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் என்பது நாட்டை சீரழிப்பதற்கான இலகுவான மார்க்கம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்