இறக்குமதி செய்யப்பட்ட குப்பைகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுமா?

இறக்குமதி செய்யப்பட்ட குப்பைகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுமா?

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2019 | 9:29 pm

Colombo (News 1st) சுங்கத்தின் பொறுப்பில் உள்ள குப்பைகளை ஏற்றிய கொள்கலன்கள் எதிர்வரும் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளதாக, இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 102 கொள்கலன்களில் 94 கொள்கலன்களில் குப்பை நிரப்பப்பட்டுள்ளமை அண்மையில் தெரியவந்தது.

அவற்றில் 5 கொள்கலன்களை சுங்க அதிகாரிகள் திறந்து பரிசீலித்தபோது இந்த விடயம் அம்பலமானது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் குப்பை அகற்றுவது தொடர்பில் கடுமையான சட்டங்களை விதித்துள்ளமையினால், அந்த செயற்பாட்டிற்காக அதிக பணத்தை செலவிட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

இந்த நிலைமை காரணமாக இலங்கை போன்ற நாடுகள் குப்பை அகற்றுவதற்காக உபாய மார்க்கங்களைப் பயன்படுத்துவதாக சுற்றாடல் அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கலாநிதி பத்மினி பட்டுவிடகே தெரிவித்துள்ளார்.

பார்சிலோனா மாநாட்டில் 187 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அதில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது. 1992 ஆம் அண்டு இலங்கை அதனை செயற்படுத்தியது. ஒரு நாட்டிற்கு குப்பையை ஏற்றுமதி செய்ய வேண்டுமாக இருந்தால், அந்நாட்டில் இருந்து முதலில் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். இலங்கையில் அதற்கான அனுமதியை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உரிய அதிகாரி வழங்க வேண்டும். அவ்வேளையில் நாம் கொள்கை ரீதியிலான தீர்மானம் ஒன்றை எடுத்தோம். அதற்கு அமைச்சரவை அனுமதி பெறப்பட்டது. உலகின் எந்தவொரு நாட்டில் இருந்தும் இலங்கைக்கு குப்பை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதில்லை என தொழில்நுட்பக் குழு தீர்மானம் எடுத்தது. அவ்வாறு கொண்டுவந்தால் அதனை அந்நாட்டிற்கே ஏற்றுமதி செய்ய வேண்டும். வௌிநாடுகளின் குப்பைகளினால் எமது நாட்டில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்

என சுற்றாடல் அமைச்சின் ஓய்வு பெற்ற மேலதிக செயலாளர் கலாநிதி பத்மினி பட்டுவிடகே தெரிவித்துள்ளார்.

எனினும், 2013ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி, சுங்கத்திற்கு போலியான தகவல்களை வழங்கி, குப்பை ஏற்றிய கொள்கலன்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

நாட்டின் சட்டத்திற்கு ஏற்ப குப்பை மீண்டும் திருப்பி அனுப்பப்படுமா?

மக்களின் கவனத்திற்கு…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்