கிண்ணத்தை சுவீகரிக்கும் கனவு யாருக்கு நிஜமாகும்?

கிண்ணத்தை சுவீகரிக்கும் கனவு யாருக்கு நிஜமாகும்?

by Staff Writer 13-07-2019 | 8:22 PM
Colombo (News 1st) இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை (14) நடைபெறவுள்ளது. முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் நாளைய இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளன. கனவான்களின் விளையாட்டான கிரிக்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடாக இங்கிலாந்து புகழப்பட்டாலும் , 44 வருட உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஒருமுறையேனும் கிண்ணத்தை சுவீகரிக்கவில்லை. அதிக சந்தர்ப்பங்களில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணியாக பதிவாகியுள்ள இங்கிலாந்து, 27 வருடங்களின் பின்னர் இவ்வருடம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவை அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தி , இங்கிலாந்து நான்காவது தடவையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஒருநாள் அரங்கில் முதலிடத்தில் நீடிக்கும் இங்கிலாந்து , கடந்த நான்கு வருடங்களில் அர்ப்பணிப்புடன் செயலாற்றியமைக்கான பிரதிபலனாகவே இவ்வருடம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக பயிற்றுநரான Trevor Bayliss கூறியுள்ளார். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து, விராட் கோஹ்லி தலைமையிலான இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த நியூசிலாந்தும் இதுவரையில் எந்தவொரு உலகக் கிண்ணத்தையும் சுவீகரித்ததில்லை. சர்வதேச ஒருநாள் அரங்கில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் இதுவரையில் 90 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 43 போட்டிகளில் நியூசிலாந்தும் 41 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றியீட்டியுள்ளன. உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதவுள்ள முதல் சந்தர்ப்பமாக நாளைய போட்டி அமையவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான இறுதிப்போட்டி ,கிரிக்கெட்டின் தாயகமான லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி நாளை மாலை 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.