by Staff Writer 13-07-2019 | 7:54 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கழிவுப்பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பகுதி தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கவனம் திரும்பியுள்ளது.
நியூஸ்ஃபெஸ்ட் நேற்று (12) இது குறித்து தகவல்களை வெளிக்கொணர்ந்ததை அடுத்து, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ஒரு பகுதியில் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டுள்ளது என சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபை விசேட கவனம் செலுத்தியுள்ளது.
கழிவுகளாகத் தென்படும் இவற்றினை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு Basel இணக்கப்பாட்டிற்கமைய எந்தவித அதிகாரமும் இல்லை.
மீள்சுழற்சி செய்யும் நோக்கில் இவை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும், அவ்வாறான மீள்சுழற்சி செயற்பாடுகளை செய்வதற்கு நாட்டிற்குள் வழிமுறையும் கட்டமைப்பும் இல்லை என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏதேனும் ஒரு விடயத்திற்காக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் கழிவுகள் குவிக்கப்படுமாயின் முதலீட்டு சபையினுடைய அனுமதியை பெறவேண்டியது கட்டாயமாகும்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் தமக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அதற்கான அனுமதியை தாம் வழங்கவில்லை எனவும் முதலீட்டு சபையின் அதிகாரி தெரிவித்தார். கழிவுகளை இறக்குமதி செய்வதற்கான சட்ட அனுமதியும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் முதலீட்டு சபையின் செயற்றிட்ட கண்காணிப்பு நிறைவேற்றுப் பணிப்பாளர், ஊடகப் பணிப்பாளர், முதலீட்டு வலயத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் ஆகியவர்களிடம் இது தொடர்பில் வினவியபோது
அவர்கள் உரிய முறையில் பதிலளிக்கவில்லை.
இது தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்காக முதலீட்டு சபையின் தலைவர் மங்கள யாப்பாவை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை.
அதிகாரிகள் மறைப்பதற்கு முயற்சிக்கும் இந்த பொருட்கள் என்ன?
இவை கட்டுநாயக்க முதலீட்டு வலயத்திற்குள் எவ்வாறு வந்தன?
இதன் உரிமையாளர் யார்?
இந்த தகவல்களை விரைவில் அம்பலப்படுத்துவதற்கு நியூஸ்ஃபெஸ்ட் தயாராகவுள்ளது.
இதேவேளை, அடுத்தவாரம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள க்ரீன் ஏர்த் மாநாட்டின் போது, தற்பொழுது துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கழிவுகள் அடங்கிய கொள்கலன் தொடர்பில், வலய நாடுகளை தௌிவூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
அபிவிருத்தியடைந்த நாடுகளின் கழிவுகளை இலங்கை உள்ளிட்ட ஆசிய பசுபிக் வலயத்திலுள்ள நாடுகளுக்கு
அனுப்பும் முறையற்ற செயற்பாடு பல வருடங்களாக இடம்பெறுவதை நியூஸ்ஃபெஸ்ட் முன்னரும் சுட்டிக்காட்டியிருந்தது.
பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 102 கொள்கலன்களில் 94 கொள்கலன்களில் கழிவுகள் அடங்கியிருக்கின்றமை அண்மையில் 5 கொள்கலன்கள் திறக்கப்பட்டபோது தெரியவந்தது.
தற்பொழுது கொழும்பு துறைமுகத்தின், சர்வதேச கொள்கலன் முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கழிவுகள் அடங்கியிருப்பதாகக் கருதப்படும் கொள்கலன்கள் எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளன.
விசாரணைகளை அடுத்து கழிவுகள் அடங்கிய குறித்த கொள்கலனை இலங்கைக்கு அனுப்பி வைத்த நாடுகளுக்கே அவற்றை மீள அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளின் போது, துறைமுக முனையத்திலிருந்து வெளியேற்றப்படாத மேலும் 27 கொள்கலன்கள் தொடர்பிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலைமையுடன் உருவெடுக்கின்ற பிரச்சினைகள் சில இருக்கின்றன.
இவ்வாறு துறைமுக முனையங்களில் அனுமதி சான்றிதழ் வழங்கப்படாத இந்த கொள்கலன்கள் எந்த நிறுவனத்தின் பெயரில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன?
இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? அவர்களை கைது செய்வதில் தாமதம் ஏன்?
சுங்க அதிகாரிகளின் முயற்சியினால் இந்த 102 கொள்கலன்களையும் கண்டுபிடிக்க முடியாது போயிருந்தால், இவை நாட்டிற்குள் வருவதனை தடுக்க முடியாது போயிருக்கும்.
இவ்வாறு முறையற்ற வகையில் இந்தோனேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கழிவுகள் அடங்கிய 57 கொள்கலன்களை மீண்டும்
அனுப்பிய நாட்டிற்கே திருப்பி அனுப்ப இந்தோனேசியா தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளிலிருந்தே கழிவுகள் உள்ளடங்கிய கொள்கலன்கள் இந்தோனேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.