ஃபேஸ்புக்கிற்கு 5 பில்லியன் டொலர்கள் அபராதம்

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம்

by Bella Dalima 13-07-2019 | 5:00 PM
சமூக வலைத்தளங்களுக்கான விதிகளை மீறி, பயனாளர்களின் இரகசிய தகவல்களை பாதுகாக்கத் தவறியமைக்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் பயனாளர்களின் இரகசிய தகவல்களைக் கொடுத்ததாக ஃபேஸ்புக் நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதற்கு பதிலளித்த ஃபேஸ்புக் நிறுவனம், ‘பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் நிறுவனம் திருடியது உண்மைதான். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ என கூறியது. இந்த புகாரின் முழு விபரம் அறிய அமெரிக்க வர்த்தக ஆணையகம் கடந்த மார்ச் மாதம் விசாரணையை ஆரம்பித்தது. இந்த விசாரணையில், கடந்த 2011ம் ஆண்டு மேற்கொண்ட, தனிப்பட்ட நபர்களின் தகவல்களை கசிய விடுவதில்லை எனும் உடன்பாட்டிற்கு எதிராக ஃபேஸ்புக் நிறுவனம் செயற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்நிறுவனத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை, ஃபேஸ்புக் நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானத்தில் 9% ஆகும். மேலும், ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இவ்வளவு பெரிய அபராதத் தொகையை செலுத்த இருப்பது இதுவே முதன்முறையாகும்.