நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் பாரியளவில் குறைவு

வறட்சிக்கு ஈடுகொடுக்காத மழை வீழ்ச்சி: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் பாரியளவில் குறைவு

by Staff Writer 13-07-2019 | 3:15 PM
Colombo (News 1st) 29 வருடங்களின் பின்னர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதான நீர்த்தேக்கங்களில் 21.5 வீதம் வரை நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார். நாளாந்தம் 12 தொடக்கம் 15 வீதமான மின்சார நுகர்வு, நீர்மின் உற்பத்தியிலிருந்து பெறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் வறட்சி காரணமாகவே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. இதேவேளை, வறட்சி காரணமாக 5,50,000-இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாட்டின் சில பகுதிகளில் தற்போது நிலவும் சிறிய அளவிலான மழை வீழ்ச்சி, வறட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.