பெட்ரோலில் இருக்க வேண்டிய ஒக்டேன் அளவில் குளறுபடி

பெட்ரோலில் இருக்க வேண்டிய ஒக்டேன் அளவில் குளறுபடி: அனோமா கமகே விளக்கம்

by Staff Writer 12-07-2019 | 9:23 PM
Colombo (News 1st) பெட்ரோலில் இருக்க வேண்டிய ஒக்டேன் அளவு உள்ளடக்கப்படவில்லை என நுகர்வோர் அமைப்பொன்று முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதில் வழங்கும் வகையில், பெட்ரோலிய அபிவிருத்தி அமைச்சில் ஊடக சந்திப்பொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, பெட்ரோலிய வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே பின்வருமாறு விளக்கமளித்தார்.
ஒக்டேன் 92 பெட்ரோலுடன் யூரோ 03, 04 ஆகியவற்றை பரிசோதித்திருந்தனர். நாங்கள் யூரோ 03-ஐ கொண்டு வருவதில்லை. இது கண்டிப்பாக இந்தியன் ஒயில் நிறுவனத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதை நாம் அறிந்து கொண்டோம். இதனை நாம் தெரிந்து கொண்ட பின்பும் களஞ்சியத்தில் உள்ள அனைத்தையும் நாம் பரிசோதிக்கக் கூறினோம். மாலையாகும் போது எனக்கு அறிக்கை கிடைத்தது. அதில் உண்மையிலேயே 92.3 மாதிரியான அளவுதான் இருந்தது. கப்பலில் எரிபொருளை ஏற்றுவதற்கு முன்பு நாம் அதனை பரிசோதித்து அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்வோம். அதேபோன்று, எமது நாட்டில் இறக்குமதி செய்வதற்கு முன்பும் மீள பரிசோதித்து அதன் அறிக்கையைக் கண்காணித்து அதன் பின்பே அதை நாங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கின்றோம். ஆனால், நாங்கள் எரிபொருளை வழங்கியதன் பின்பு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எதை வேண்டுனாலும் பிரித்து வழங்க முடியும். இது IOC-யா அல்லது CPC-யா என்பதில் வித்தியாசம் கிடையாது. இவ்வளவு காலத்தில் நாம் IOC-யை பரிசோதனை செய்யவில்லை. இது எமக்கு தொடர்புபட்ட விடயம் இல்லை என்பதால். ஆனாலும், நான் IOC நிறுவனத்திற்கு எழுத்து மூலமாக அறிக்கை விடுத்துள்ளேன்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக IOC நிறுவனத்தை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை. பணம் செலுத்தப்படாமை காரணமாக பெட்ரோலிய வள கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதை இடைநிறுத்தியதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் இன்றைய ஊடக சந்திப்பின் போது பிரதி அமைச்சர் பின்வருமாறு பதில் வழங்கினார்.
மின்சார சபை இன்று எமக்கு 80 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. நாமும் கடனுக்கு கொள்வனவு செய்து இருக்கின்றோம் எமக்கு கடன் செலுத்தப்படவில்லை என்றால், எம்மாலும் கடனை செலுத்த முடியாது போகும். இது ஒரு சக்கரத்தை போன்றது. நாமும் அரசாங்கத்தவர்கள், மின்சார சபையும் அரசாங்கத்தவர்கள், மக்களுக்கு மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது. எரிபொருள் இல்லாமலும் இருக்க முடியாது. அதனால் இரண்டுமே சமநிலை நிகராகவே செல்கின்றது. மின்சாரத் தடை உண்மையிலேயே எரிபொருள் இல்லாமையால் இடம்பெற்ற ஒன்று அல்ல. மின்சாரத்தினால் இவற்றை செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக இருக்கலாம் . எரிபொருள் வழங்காமையால் மின்சாரம் தடைப்படவில்லை.