பூஜித், ஹேமசிறிக்கு எதிரான மனுக்கள் பரிசீலனை

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு எதிரான மனுக்களை 25 ஆம் திகதி பரிசீலிக்க தீர்மானம்

by Staff Writer 12-07-2019 | 3:22 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமைக்காக கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் வழக்கு தொடருமாறு கோரி 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை எதிர்வரும் 25 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இன்று தீர்மானித்தது. குறித்த மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை காணப்படுமாயின் எதிர்வரும் 18 ஆம் திகதி மனுக்களை தாக்கல் செய்யுமாறும், ஆட்சேபனைக்கு எதிரான மனுக்களை எதிர்வரும் 23 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறும் நீதியரசர் குழாம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, முதலாவது மற்றும் இரண்டாவது மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆஜராகப்போவதில்லையென சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா மன்றில் தெரிவித்துள்ளார்.