கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை தனியார்மயப்படுத்தும் உடன்படிக்கையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

by Staff Writer 12-07-2019 | 8:26 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தனியார்மயப்படுத்துவதற்காக கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை இரத்து செய்யுமாறு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கிழக்கு முனையத்தை செயற்படுத்துமாறு, பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறித்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்து, நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இலங்கை கடந்த மே மாதம் 28 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர மேலும் எட்டு விடயங்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. பாரியளவிலான கப்பல்களை செயற்படுத்தக்கூடிய ஒரேயொரு முனையத்தை, சர்வதேச நிறுவனங்களிடம் ஒப்படைப்பது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த முனையத்தின் நடவடிக்கைகளுக்கு தேவையான பயிற்சி, மனித வளம் மற்றும் முகாமைத்துவம் ஆகியன இலங்கை துறைமுக அதிகார சபை வசமுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பையும் துறைமுக சேவை தொழில்களுக்கு அபாயத்தையும் ஏற்படுத்தும் இந்த உடன்படிக்கையை இரத்து செய்யுமாறு, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பினர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.