கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத் தலைமையத்தில் நாளை ஆடிவேல் விழா

by Staff Writer 12-07-2019 | 8:48 PM
Colombo (News 1st) அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேலாயுதப் பொருமானை வழிபடுவதற்குரிய சந்தர்ப்பம் மலைய மக்களுக்கு இன்று கிட்டியது. ஆடிவேல் சக்திவேல் பவனி கொழும்பு ஜிந்துப்பிட்டி ஶ்ரீ சிவசுப்ரமணிய ஆலயத்தினைநோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத் தலைமையத்தில் நாளை (13) ஆடிவேல் விழா நடைபெறவுள்ளது. யாழ் - தொண்டைமானாறு செல்வச்சந்நிதியில் இருந்து பயணத்தை ஆரம்பித்த எம்பெருமான் நேற்று கொட்டகலையை சென்றடைந்தார். கொட்டகாலை ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் வேல் பெருமானுக்கு இன்று காலை விசேட பூசைகள் இடம்பெற்றன. மங்கள வாத்தியங்கள் முழங்க, தேவாரா பாராயணங்கள் ஒலிக்க, வேல்பெருமான் உள்வீதி வலம் வந்தார். பக்தர்களின் அரோகரா கோஷம் வானுயர்ந்து ஒலிக்க, ஆடிவேல் சக்திவேல் பவனிக்காக சிறப்புற வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தியில் வேல்பெருமான் எழுந்தருளினார். குறிஞ்சிக்குமரன் உறையும் இயற்கை எழில் கொஞ்சும் மலையகத்தினூடாக வேல்பெருமான் சஞ்சரித்தார். கொட்டகலை நகர்வாழ் மக்களுக்கும் அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல் பெருமானின் அருட்கடாட்சம் கிடைத்தது. ஆடிவேல் சக்திவேல் பவனியின் கண்கொள்ளாக் காட்சியை கான்பதற்கு ஹட்டன் நகர் முருகன் ஆலயத்திற்கு முன்பாக பெருந்திரளான பக்தர்கள் கூடினர். கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம்,கொட்டக்கலை கேம்பிரிட்ஜ் கல்லூரி, வட்டவளை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் கடவளை விக்னேஸ்வரா கல்லூரி மாணவர்களுக்கும் வேல் பெருமானை தரிசிப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டியது. யட்டியாந்தோட்டை ஶ்ரீ கதிர்வேலாயுதர் சுவாமி ஆலயத்தில் வேல் பெருமானுக்கு விசேட பூசைகள் இடம்பெற்றன. தொஹியோவிட்ட, அவிசாவளையூடாக எழுந்தருளிய வேல் பெருமானை தரிசிப்பதற்கு பெருந்திரளான பக்தர்கள் கூடியிருந்தனர். நாளைய தினம் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத் தலைமையகத்தை வந்தடையவுள்ள வேலாயுதப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறவுள்ளன. பல்வேறு பாரம்பரிய , கலை கலாசார நிகழ்வுகளுடன் ஆடிவேல் விழா வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையகத்தில் நாளை நடைபெறவுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி கதிர்காமத் திருத்தலத்திற்கு வேலாயுதப் பெருமான் எழுந்தருளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.