கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீள அனுப்புமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆலோசனை

by Staff Writer 12-07-2019 | 8:13 PM
Colombo (News 1st) பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய ஒரு தொகை கொள்கலன்களில் சூழலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுப்பொருட்கள் அடங்குவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆம் திகதி சுங்க அதிகாரிகள் கொள்கலன்களை திறந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் ஊடாக, பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 102 கொள்கலன்களில் 94 கொள்கலன்களில் கழிவுப்பொருட்கள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டது. பயன்படுத்தப்பட்ட ஒரு தொகை மெத்தைகள் என கூறி கொண்டுவரப்பட்ட இந்த கொள்கலன்களில் இருந்து, தரை விரிப்பு, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் ஆகிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் குறிப்பிட்டனர். இந்த கழிவுகளுக்குள் வைத்தியசாலைகளில் இருந்து அகற்றப்படும் கழிவுகளும் அடங்குவதாக, இது தொடர்பில் வினவிய போது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இரசாயனம் மற்றும் அபாயகரமான கழிவுகள் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர கூறினார். இந்த கொள்கலன்களை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுங்க தரப்பினர் கூறினர். Basel மாநாட்டிற்கு அமைய, கழிவுப்பொருட்களை இவ்வாறு நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு எவ்வித இயலுமையும் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மீள் சுழற்சிக்காக இந்த கழிவுப்பொருட்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்வதற்கான நடைமுறையோ, இயந்திரங்களோ நாட்டில் இல்லை என சுங்கப்பிரிவினர் கூறினர்.