கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அமெரிக்க சரக்கு விமானம்

by Staff Writer 12-07-2019 | 7:48 PM
Colombo (News 1st) கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தம் எனப்படும் ACSA உடன்படிக்கையின் ஊடாக, அமெரிக்க இராணுவத்தின் விநியோக மத்திய நிலையமாக இலங்கையை பயன்படுத்துவதற்கான முயற்சி தொடர்பில் தற்போது அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அமெரிக்காவின் சரக்கு விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று அதிகாலை வந்தடைந்தது. அமெரிக்காவின் Western Global Airlines என்ற சரக்கு விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான McDonnell Douglas MD-11 விமானம் இன்று அதிகாலை 3.47 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்தது. அமெரிக்க தயாரிப்பான இந்த விமானம், அதிகளவான பொருட்களுடன் நெடுந்தூரம் பயணிக்கக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. WGN 1710 இலக்க விமானம், பஹ்ரேனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தது. ஜேர்மனியின் Frankfurt இல் இருந்து பஹ்ரேனுக்கு இந்த விமானம் பயணித்துள்ளது. சில நாடுகளிலுள்ள அமெரிக்க முகாம்களுக்கு இந்த விமானம் கடந்த நாட்களில் பயணித்துள்ளமை, இந்த விமானத்தின் பயண மார்க்கத்தை ஆராய்ந்த போது தெரியவந்தது. ஜூலை 5 ஆம் திகதி கட்டாரிலுள்ள விமானத் தளத்திற்கும், ஜூலை 2 ஆம் திகதி இத்தாலியின் Catania விமான தளத்திற்கும் இந்த விமானம் பயணித்துள்ளது. அத்துடன், அமெரிக்க முகாம் அல்லது இராணுவம் நிலைகொண்டுள்ள நகரங்களுக்கு கடந்த காலப்பகுதியில் அதிகளவில் இந்த விமானம் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் இவர்களின் முக்கிய வாடிக்கையாளர் என்பது இந்த விமானம் உரித்துடைய Western Global Airlines நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஆராய்ந்த போது தெரியவந்தது. அதற்கமைய, ACSA உடன்படிக்கையின் கீழ், அமெரிக்க இராணுவத்திற்காக பொருட்களை ஏற்றி வந்த விமானமாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தில் பயணித்திக்கொண்டிருந்த USS John C. Stennis போர் கப்பலுக்கு, கட்டுநாயக்க ஊடாக ஏற்கனவே பொருட்கள் பரிமாற்றப்பட்டுள்ளன. பஹ்ரேனில் இருந்து கட்டுநாயக்கவிற்கு கொண்டுவரப்பட்ட பொருட்கள், கப்பலிலுள்ள விசேட சரக்கு விமானங்களின் ஊடாக, கட்டுநாயக்கவில் இருந்து கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவ்வாறு அமெரிக்க கப்பலுக்கு பொருட்களை கொண்டு செல்லும் போது, இலங்கை சுங்கம் அல்லது வேறு பாதுகாப்பு பிரிவுகள் சோதனைகளை மேற்கொள்ளவில்லை. எவ்வாறாயினும், USS John C. Stennis கப்பல், ஐக்கிய அமெரிக்காவில் தற்போது நங்கூரமிடப்பட்டுள்ளது. இரண்டு எரிபொருள் கப்பல்களை ஈரான் தாக்கியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு முன்வைத்ததை அடுத்து, வளைகுடாவில் ஏற்பட்ட பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்ட அமெரிக்கா, USS Abraham Lincoln போர் கப்பலை ஓமான் வளைகுடாவிற்கு அருகாமையில் பாகிஸ்தானுக்கு அண்மித்த பகுதியொன்றில் நிறுத்தி வைத்துள்ளது. இந்த கப்பலுக்குத் தேவையான பொருட்களுடனா, அமெரிக்க சரக்கு விமானம் கட்டுநாயக்கவிற்கு வருகை தந்தது? இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போது, விமானம் வருகை தந்ததை மாத்திரம் உறுதி செய்த விமான நிலைய அதிகாரிகள், அதில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவல்கள் இல்லை என கூறினர். இந்த விமானம் தொடர்பில் எதனையும் அறியவில்லை என கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சிவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டது. இந்த விமானம் தொடர்பில் எவ்வித தலையீடுகளும் செய்யவில்லை என இராணுவத்தினர் உறுதிப்படுத்தினர். விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள் சோதனைக்குட்படுத்தப்படும் போதிலும், விமானத்திற்குள் இருக்கும் பொருட்கள் சோதனை செய்யப்படாது என சுங்கப் பிரிவினர் கூறினர். அதற்கமைய , இன்று அதிகாலை வந்த விமானம் ACSA உடன்படிக்கையின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருட்கள் பரிமாற்றல் செயற்பாடு இல்லையா?