அவுஸ்திரேலிய பசுக்கள் இறக்குமதி தொடர்பில் ஆய்வு

சர்ச்சைக்குரிய அவுஸ்திரேலிய பசுக்கள் இறக்குமதி தொடர்பில் ஆய்வு

by Staff Writer 12-07-2019 | 5:00 PM
Colombo (News 1st) சர்ச்சைக்குரிய அவுஸ்திரேலிய பசுக்கள் இறக்குமதி தொடர்பில் அந்நாட்டின் பிரதிநிதிகள் சிலர் இலங்கையில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர். பசுக்கள் இறக்கின்றமை மற்றும் அவற்றின் நோய் பரவலுக்கான காரணம் தொடர்பில் அவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர். இறக்குமதி செய்யப்பட்டுள்ள அவுஸ்திரேலிய பசுக்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று குறித்த குழுவினர் ஆய்வுகளை முன்னெடுத்து அறிக்கை தயாரிக்கவுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை அமைச்சின் செயலாளர் A.D.S. ருவன் சந்திர தெரிவித்தார். நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவில் இருந்து இதுவரை 5000 பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த பசுக்கள் நாட்டில் 67 இடங்களில் உள்ளன. இதேவேளை, தமது சங்கத்தின் உறுப்பினர்கள் கொள்வனவு செய்த பசுக்கள் உயிரிழக்கின்றமை தொடர்பில் அரசாங்கம் இதுவரை நியாயமான பதிலளிக்கவில்லை என அகில இலங்கை பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அமல் சூரியகே தெரிவித்துள்ளார். அத்துடன், அவுஸ்திரேலிய பிரதிநிதிகளின் ஆய்வு பக்கசார்பாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அவுஸ்திரேலிய பசுக்களை கொள்வனவு செய்துள்ள அனைத்து பண்ணைகளும் அந்நாட்டு பிரதிநிதிகளினால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய பிரதிநிதிகளின் ஆய்வு நடவடிக்கை முறையாக முன்னெடுக்கப்படாவிட்டால் ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவிய ​போது விவசாய அமைச்சின் செயலாளர் ருவன் சந்திர தெரிவித்தார்.