தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான சந்தர்ப்பம்

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு தமது பிள்ளைகளை அதே பாடசாலையில் இணைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம்

by Staff Writer 11-07-2019 | 9:41 AM
தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல் Colombo (News 1st) தேசிய பாடசாலைகளில் 3 வருடங்களுக்கும் மேலான சேவையைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள், அவர்கள் கல்வி கற்பிக்கும் பாடசாலைகளில் தமது பிள்ளைகளை இணைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு, உரிய அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவுறுத்தியுள்ளார். பாடசாலைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர்கள், தமது  பிள்ளைகளை அவர்கள் கல்வி கற்பிக்கும் பாடசாலைகளில் சேர்ப்பதை இலகுவாக்குவதற்காக அமைச்சர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய பாடசாலைகளில் தரம் 1, 5, 6 மற்றும் தரம் 11 தவிர்ந்த ஏனைய தரங்களில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் நடவடிக்கைகளைத் திறம்பட செய்வதற்கு வாய்ப்புக் கிட்டும் என, கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.