ஆடிவேல் சக்திவேல் பவனி கொட்டகலை நகரை சென்றடைந்தது

ஆடிவேல் சக்திவேல் பவனி கொட்டகலை நகரை சென்றடைந்தது

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2019 | 8:06 pm

Colombo (News 1st) கதிர்காமக்கந்தனை போற்றும் ஆடிவேல் சக்திவேல் பவனி இன்று கொட்டகலை நகரை சென்றடைந்தது.

அறுபடை வீடுகளில் பூசிக்கப்பட்ட வேலாயுதப் பொருமானை வழிபடுவதற்கு இன்றும் அதிகளவிலான பக்தர்கள் கூடியிருந்தனர்.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் மூன்றாவது தடவையாகவும் இம்முறை ஆடிவேல் சக்திவேல் விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

அன்னதானக் கந்தனின் சந்நிதியில் இருந்து முதல் நாள் பயணத்தை ஆரம்பித்த எம்பெருமான், நேற்றிரவு வவுனியா கந்தசுவாமி ஆலயத்திற்கு எழுந்தருளினார்.

இன்று காலை வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் வேலாயுதப் பெருமானுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

ஆலய சிவாச்சாரியார்களால் சிறப்பாக நடத்திவைக்கப்பட்ட பூஜை வழிபாட்டில் அதிகளவிலான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா கந்தசுவாமி ஆலய உள்வீதியில் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி உலாவந்த எம்பெருமான் மீண்டும் திருத்தேரில் பவனியை ஆரம்பித்தார்.

பல கிராமங்களையும் நகரங்களையும் கடந்து ஆடிவேல் சக்திவேல் பவனி கெக்கிராவை நகரிலுள்ள பிள்ளையார் கோவிலை அடைந்தது.

ஆலய வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் எம்பெருமானை வரவேற்று, வழிபட்டு காணிக்கைகளை செலுத்தினர்.

தம்புள்ளை நகரிலும் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து பக்தர்கள் எம்பெருமானை வழிபட்டனர்.

தொடர்ந்து வடக்கு மாத்தளை ஶ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தை சக்திவேல் பவனி சென்றடைந்ததும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இன்று பிற்பகல் வேளையில் மாத்தளை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தை வேல் பவனி சென்றடைந்தது.

ஆலய வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் கதிர்காமம் திருத்தலத்தை நோக்கி பவனி செல்லும் வேலாயுதப் பெருமானை பக்தியுடன் வழிபட்டனர்.

கண்டி மாவட்டத்தின் பல நகரங்களைக் கடந்து இன்று மாலை கொட்டகலை நகரை வேல் பவனி சென்றடைந்தது.

நாளை மறுதினம் (13) வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத் தலைமையகத்தை வந்தடையவுள்ள வேலாயுதப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறவுள்ளன.

முருகனை வழிபடும் அதேவேளை, பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளையும் பக்தி பரவசத்துடன் காணும் வாய்ப்பு இதன்போது பக்தர்களுக்கு கிட்டவுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி கதிர்காமத் திருத்தலத்திற்கு வேலாயுதப் பெருமான் எழுந்தருளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்