ருஹுணு பல்கலையின் கல்விசாரா ஊழியர்கள் பகிஷ்கரிப்பு

ருஹுணு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பகிஷ்கரிப்பு

by Staff Writer 10-07-2019 | 6:59 AM
Colombo (News 1st) ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை மறித்து நின்ற மாணவர்கள் சிலர் கல்விசாரா ஊழியர்கள் மீது முன்னெடுத்த தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுஜீவா அமரசேனா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்றைய தினம் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடி பல்கலைக்கழகத்தைத் தற்காலிகமாக மூடுவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நேற்று இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து தமது உறுப்பினர்கள் சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. மாணவர்களின் தாக்குதலின்போது காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்றிரவு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து அவர்கள் கடமையிலிருந்து விலகியுள்ளனர். இதனையடுத்து, பல்கலைக்கழக பாதுகாப்புக்காக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.