ரத்துபஸ்வல விசாரணைக்கு விசேட நீதிமன்றம்

ரத்துபஸ்வல துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான விசாரணைக்கு விசேட நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு கோரிக்கை

by Staff Writer 10-07-2019 | 12:33 PM
Colombo (News 1st) ரத்துபஸ்வல துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 4 பிரதிவாதிகளுக்கு எதிராக 94 குற்றச்சாட்டுக்களின் கீழ், கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி நிரோஷா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். பிரிகேடியர் அநுர தேசப்பிரிய குணவர்தன மற்றும் இராணுவ உறுப்பினர்களான டிங்கிரி அருணகே சிறிசேன, ஜயசுந்தர முதியன்சலாகே திலகரத்ன மற்றும் லலித் குறே ஆகியோர் வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 2013ஆம் ஆண்டு ரத்துபஸ்வல பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்ததோடு, சுமார் 40 பேர் காயமடைந்தனர். தொழிற்சாலைக் கழிவுகள் ரத்துபஸ்வல பகுதியிலுள்ள நீர்நிலைகளில் கலப்பதாகத் தெரிவித்து அங்குள்ள மக்கள் வீதியில் இறங்கி போராடியபோதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.