கழிவுப்பொருட்களை திருப்பியனுப்பத் திட்டம்

பிரித்தானியாவிலிருந்து கழிவுப்பொருட்கள்: திருப்பியனுப்ப சுங்கப் பிரிவினர் திட்டம்

by Staff Writer 10-07-2019 | 10:25 PM
Colombo (News 1st) பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் 5 கொள்கலன்களை சுங்க அதிகாரிகள் இன்று திறந்தனர். அவற்றில் கழிவுப்பொருட்கள் காணப்படுகின்றமை ஆரம்ப கட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் என கூறி கொண்டுவரப்பட்ட இந்த கொள்கலன்களில் இருந்து தரை விரிப்பு, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கம் குறிப்பிட்டது. இவ்வாறான 102 கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவற்றில் 94 கொள்கலன்கள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் அரசுடமையாக்கப்படும். எனினும், இவற்றில் கழிவுப்பொருட்கள் அடங்குவதால் மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுங்க தரப்பினர் கூறினர். கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் இந்த சந்தேகத்திற்கிடமான கொள்கலன்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கொள்கலன்கள் கடந்த திங்கட்கிழமை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவிருந்த போதிலும், பாதுகாப்பு காரணங்களினால் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனைய அதிகாரிகள் அதற்கு இடமளிக்கவில்லை. கொள்கலன்கள் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாக சுங்கம் குறிப்பிட்டது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இரசாயன மற்றும் கழிவுப்பொருள் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொள்வதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கூறினார். கழிவுப்பொருட்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு எவ்வகையிலும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.