இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது நியூஸிலாந்து

இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது நியூஸிலாந்து

by Staff Writer 10-07-2019 | 8:05 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் நியூஸிலாந்து தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கான அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை 18 ஓட்டங்களால் நியூஸிலாந்து வீழ்த்தியது. மென்செஸ்டரில் நேற்று (09) ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டது. இதனால் போட்டி இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், இன்று ஆட்டத்தை தொடர்ந்த நியூஸிலாந்து எஞ்சிய 23 பந்துகளில் 3 விக்கெட்களை இழந்து 28 ஓட்டங்கள் பெற்றது. அதற்கமைய, நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ஓட்டங்களை அடைந்தது. பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்களை கைப்பற்றினார். வெற்றி இலக்கான 240 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி தடுமாற்றமான ஆரம்பத்தைப் பெற்றது. ரோஹித் சர்மா, அணித்தலைவர் விராட் கோஹ்லி, லோகேஷ் ராகுல் ஆகியோர் ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக் 6 ஓட்டங்களுடன் வெளியேற இந்திய அணியால் முதல் பவர் பிளேயில் 4 விக்கெட்களை இழந்து 24 ஓட்டங்களையே பெற முடிந்தது. ஆனாலும், ரிஷப் பான்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 32 ஓட்டங்களைப் பெற்று ஆறுதல் கொடுத்தனர். சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா மற்றும் மஹேந்திர சிங் தோனி ஜோடி 116 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கியது. அரைச்சதமடித்த ரவீந்திர ஜடேஜா 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 77 ஓட்டங்களைப் பெற்றார். மஹேந்திர சிங் தோனி 50 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆக நியூஸிலாந்து அணியின் வெற்றி இலகுவானது. இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. பந்து வீச்சில் மெட் ஹென்ரி 3 விக்கெட்களையும், ட்ரென்ட் பௌல்ட், மிச்சல் ஷான்ட்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.