தடைப்பட்ட அரையிறுதிப் போட்டி இன்று தொடரவுள்ளது

மழையால் தடைப்பட்ட முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று தொடரவுள்ளது

by Staff Writer 10-07-2019 | 8:06 AM
Colombo (News 1st) மழை காரணமாக தடைப்பட்ட இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி இன்று (10ஆம் திகதி) தொடரவுள்ளது. உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது அரையிறுதிப் போட்டி மழை காரணமாக நேற்று (9ஆம் திகதி) தடைப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்தது. ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியாத நிலையில், சுமார் 4 மணித்தியாலங்கள் 20 நிமிட தாமதத்திற்கு பின்னர், ஆட்டத்தை ஒத்தி வைப்பதற்கு நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, நேற்றைய தினம் ஆட்டம் கைவிடப்பட்டதிலிருந்து இன்றைய ஆட்டம் தொடரவுள்ளது. அதனடிப்படையில் மீதமுள்ள 3.5 ஓவர்களை நியூஸிலாந்து இன்று எதிர்கொள்ளவுள்ளதுடன், இதனையடுத்தே இந்தியா களமிறங்கவுள்ளது. இன்றைய போட்டியின் போதும் மழை பெய்யும் பட்சத்தில், டக் வர்த் லுயிஸ் அடிப்படையில் இந்திய அணியின் வெற்றியிலக்கு மாற்றியமைக்கப்படும். மழை காரணமாக இன்றைய ஆட்டமும் தடைப்படுமாயின், இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.