65,000 மில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

65,000 மில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2019 | 8:36 pm

Colombo (News 1st) பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சினால் இன்று 65,000 மில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சமர்ப்பித்த குறைநிரப்பு பிரேரணையில் அதிவேக வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக 51,131 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளது.

இதில் 55,818 மில்லியன் ரூபா அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச கடனை மீளச் செலுத்துவதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும், 6044 மில்லியன் ரூபா வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்நாட்டு வெளிநாட்டு கடன் எல்லையை 480 பில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்காக இன்று பாராளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Millennium Challenge Corporation நிறுவனத்தின் உதவியாக இலங்கைக்கு 480 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியின் பெறுமதி சுமார் 85 பில்லியன் ரூபாவாகும்.

போக்குவரத்து வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காகவும் காணி சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும் இந்த பணத்தை செலவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் காணி நிர்வாகம் தொடர்பில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு தாக்கத்தை செலுத்தும் பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட 480 மில்லியன் டொலர் உடன்படிக்கையை செயற்படுத்துவதற்கு தமது நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக Millennium Challenge Corporation நிறுவனத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம நிறைவேற்று அதிகாரி ஷோன் கேயன் க்ரோஸ், பிரதமருக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய தீர்மானமிக்க தருணத்தில் உரிய நேரத்தில் இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் இலங்கை மக்களின் சுபீட்சத்தை உறுதிப்படுத்தி வறுமையை ஒழித்து இரண்டு நாடுகளினதும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவும் பிரதமரின் தலைமைத்துவத்தை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதாரத்தில் தற்போது தாக்கம் செலுத்தும் பிரச்சினையாக போக்குவரத்து மற்றும் காணி நிர்வாகம் அமைந்துள்ளதா என்பது கேள்விக்குறியே.

நாட்டு மக்கள் குறித்து சிந்திப்பதாக இருந்தால் விவசாயம், நீர்ப்பாசனம், நீர் விநியோகம், சுகாதார வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் தீர்வு காணப்படவேண்டிய ஏராளமான பிரச்சினைகளை அடையாளம் காண முடியும்.

இந்த பின்புலத்திலேயே நிதி அமைச்சர் கூறும் வகையில், 480 பில்லியன் ரூபா வரை கடனை பெற்றுக்கொள்வதற்கு நேரிட்டுள்ளது.

அமெரிக்காவின் Millennium Challenge Corporation நிறுவனம் உண்மையாகவே இலங்கை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஆர்வம் செலுத்துவதாக இருந்தால், இந்த 480 மில்லியன் டொலர் நிதியை முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவைகளுக்காக பயன்படுத்த பிரதமரால் முடியுமல்லவா?

குறைந்தபட்சம் நாட்டின் கடன் தேவையைக் குறைப்பதற்கேனும் இந்த பணத்தை செலவிட முடியாதா?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்