முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று

by Staff Writer 09-07-2019 | 9:03 AM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று (9ஆம் திகதி) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் முன்னாள் சம்பியனான இந்தியா நியூஸிலாந்தை எதிர்த்தாடவுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து முன்னின்று நடத்துகின்றது. இந்தியா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளன. இந்நிலையில், இன்று மாலை 3 மணிக்கு மென்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதவுள்ளன. விராட் கோஹ்லி தலைமையிலான இந்தியா, லீக் சுற்றில் 9 போட்டிகளில் விளையாடி அதில் 7 ​போட்டிகளில் வெற்றியீட்டி, அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து லீக் சுற்றில் 9 போட்டிகளில் விளையாடி அதில் 5 போட்டிகளில் வெற்றியீட்டி, அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றது. உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் நியூஸிலாந்தும் அரையிறுதிப் போட்டியொன்றில் மோதிக்கொள்ளவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் நியூஸிலாந்து அரையிறுதிக்கு எட்டாவது தடவையாக தகுதி பெற்றுள்ளதுடன், இந்தியா ஏழாவது தடவையாக அரையிறுதிப் போட்டியில் விளையாட தயாராகியுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் நியூஸிலாந்தும் இதுவரையில் 8 தடவைகள் மோதியுள்ளதுடன், அதில் 4 போட்டிகளில் நியூஸிலாந்து வெற்றியீட்டியுள்ளது. 3 போட்டிகளில் இந்தியா வெற்றியீட்டியுள்ளதுடன் ஒரு போட்டி மழையால் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதியிருந்தன. அந்தப் போட்டியில் இந்தியாவை விராட் கோஹ்லியும் நியூஸிலாந்தை கேன் வில்லியம்சனும் வழிநடத்தியிருந்தனர். அதில் இந்தியா 3 விக்கெட்களால் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா, இன்றைய போட்டியில் மேலும் 26 ஓட்டங்களை பெறும் பட்சத்தில் முன்னாள் ஜாம்வான் சச்சின் டென்டுல்கர் 2003ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நிலைநாட்டிய சாதனையை முறியடிப்பார். 2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சச்சின் டென்டுல்கர் 673 ஓட்டங்களை குவித்திருந்தார். இதுவே உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரொன்றில் வீரர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்டங்களாக இன்றளவும் கணிக்கப்படுகிறது. இன்றைய போட்டியானது இந்தியாவின் முன்னாள் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனியின் 350ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியாக அமையவுள்ளது.