இலங்கை கிரிக்கெட் குழாம் நாடு திரும்பியது

இலங்கை கிரிக்கெட் குழாம் நாடு திரும்பியது

by Staff Writer 08-07-2019 | 3:25 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை குழாம் இன்று (8ஆம் திகதி) நாடு திரும்பியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி, லீக் சுற்றில் 9 போட்டிகளில் விளையாடி அதில் 3 போட்டிகளில் வெற்றியீட்டியது. எஞ்சிய 4 போட்டிகளில் இலங்கை அணியால் வெற்றியீட்ட முடியாமல் போனதுடன், இரண்டு போட்டிகள் மழையால் முடிவின்றி கைவிடப்பட்டன. இதனால் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இலங்கை அணிக்கு அற்றுப்போனதோடு, லீக் சுற்றில் ஆறாமிடத்தைப் பிடித்தது.
ரசிகர்களைப் போன்றே வீரர்களும் ​போட்டிகளில் வெற்றியீட்டுவதற்காகவே வீரர்கள் விளையாடுகின்றனர். வெற்றிபெற்றால் கொண்டாடுவதற்கு அனைவரும் இருக்கின்றனர். தோல்வியடைந்தால் இவ்வாறு தான் என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கருத்துத் தெரிவித்துள்ளார். மழையால் எமக்கு விளையாட முடியாமல் போனது. அந்த இரு போட்டிகளில் விளையாடியிருந்தால் எமக்கு அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருந்தது. நாம் இங்கிலாந்துக்கு செல்லும்போது முதல்தர அணியாக இங்கிலாந்து காணப்பட்டது. எனினும் அவர்கள் எம்மிடம் தோற்றார்கள். சிறப்பாக விளையாடுகின்ற அணி மாத்திரமே வெற்றியீட்டும்
என வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் தெரிவித்துள்ளார். இதேவேளை,
அணியைத் தெரிவுசெய்யும்போது, சிறந்த அணியொன்றையே தெரிவு செய்தோம். விளையாடுவதையும் விளையாடாமல் விடுவதையும் மைதானத்திற்கு சென்றால் மாத்திரமே மேற்கொள்ள முடியும். அனைவருக்கும் ஒரே மாதிரியாக விளையாட முடியாது அல்லவா? அதனாலேயே வீரர்கள் 11 பேர் விளையாடுகின்றனர். சிறப்பாக விளையாடினோம். சில வீரர்களால் பிரகாசிக்க முடியாமல் போனது. சிலர் சிறப்பாக விளையாடினார்கள். அதுவே விளையாட்டின் தன்மை. எமக்கு அனைவரும் வாழ்த்து கூறினார்கள். நாம் இவ்வளவு தூரத்துக்கு முன்னேறியமை தொடர்பில் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். அது தொடர்பில் நாமும் மகிழ்ச்சியடைவதாக இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன கருத்துத் தெரிவித்துள்ளார்.