இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கோப்ரல் கைது

இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கோப்ரல் கைது

by Staff Writer 08-07-2019 | 3:34 PM
Colombo (News 1st) இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கோப்ரல் லலித் ராஜபக்ஸ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊடகவியலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட கைவிரல் அடையாளத்துடன் லலித் ராஜபக்ஸவின் கைவிரல் அடையாளம் ஒத்துப்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே, ஹங்வெல்ல பகுதியிலுள்ள வீட்டில் வைத்து லலித் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் காரிலிருந்து பெறப்பட்ட கைவிரல் அடையாளம் தொடர்பில் இதுவரை 285 இராணுவத்தினரின் கைவிரல் அடையாளங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். எனினும், கைவிரல் அடையாளப் பதிவாளரினால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் குறித்த கைவிரல் அடையாளங்கள் எவையும் பொருந்தவில்லை. இதனையடுத்து குறித்த 285 இராணுவத்தினரின் கைவிரல் அடையாளங்கள், ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட அடையாளங்களுடன் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன்போதே, லலித் ராஜபக்ஸவின் கைவிரல் அடையாளம் ஒத்துப்போவதால், சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கோப்ரல் லலித் ராஜபக்ஸ 2014ஆம் ஆண்டு ஜேர்மனியில், இலங்கைக்கான தூதரகத்தில் கடமையாற்றியதுடன், 2017ஆம் ஆண்டு அவர் நாடு திரும்பியுள்ளார்.