யுரேனியத்தின் அளவை அதிகரிக்கும் ஈரான்

யுரேனியத்தின் அளவை அதிகரிக்கும் ஈரான்

by Staff Writer 07-07-2019 | 9:27 AM
Colombo (News 1st) 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியத்தின் அளவை 5 வீதமாக அதிகரிக்கவுள்ளதாக, ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வௌியிடப்படும் என ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரான் தமது அணுவாயுத உற்பத்திகளின் போது 3.67 வீத யுரேனியத்தையே பயன்படுத்தி வந்தது. இந்நிலையில், யுரேனியத்தின் அளவை 5 வீதமாக அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் ஈரானின் அணுவாயுத உற்பத்தி துறைசார் சிரேஷ்ட தலைவர் அப்பாஸ் அராக்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்புகளும் இன்று வௌியிடப்படும் என அவர் கூறியுள்ளார். 2015 ஆம் ஆண்டு பிரித்தானியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மன், சீனா என சர்வதேச அளவில் அதிக சக்தி வாய்ந்த 6 நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் ஈரான் 2015 அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன்படி, ஈரான் தன்னுடைய அணுவாயுத ஆய்வைக் கைவிடுவதற்குப் பதிலீடாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டன. எவ்வாறெனினும், ஈரான் ஒப்பந்தத்தை மீறி செய்றபடுவதாகத் தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரான் - அமெரிக்காவுக்கு இடையிலான பதற்றநிலைமை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.