by Staff Writer 05-07-2019 | 6:57 PM
Colombo (News 1st) ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ மற்றும் Avant Garde Maritime Services (pvt) ltd நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு இன்று கட்டளையிட்டுள்ளார்.
Avant Garde Maritime Services நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை முன்னெடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கியமை, துப்பாக்கி கட்டளை சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றம் என அறிவித்து இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற கொமடோர் விஸ்வஜித் நந்தன லியபலனகே, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான சமன் திசாநாயக்க, ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி பீ.பி.பிரேமச்சந்திர, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தின் தலைவர் பேர்சி விக்டர் சமரவீர ஆகியோரையும் கைது செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிகள் கட்டளை சட்டத்தின் கீழ் காணப்படும் குற்றச்சாட்டுகள் தவிர, சமன் திசாநாயக்க , பீ.பி. பிரேமச்சந்திர மற்றும் நிசங்க சேனாதிபதி ஆகியோர் மீது பொய் சாட்சியம் வழங்கியமை, அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை இலங்கை தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் குற்றங்கள் என சட்ட மா அதிபர் கூறியுள்ளார்.
காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் Avant Garde மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பான வழக்கு விசாரணையின் போது தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடுமாறு பாலித பெர்னாண்டோ, கருணாரத்ன எகடோவல, நிசங்க சேனாதிபதி, நந்தன தியபலனகே , சமன் திசாநாயக்க ஆகிய 5 பிரதிவாதிகள் உயர் நீதிமனறத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாகவும் சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
இந்த வழக்கை நேற்றைய தினம் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, குறித்த மனுக்கள் வலுவிழந்துள்ள நிலையில், அது குறித்த தீர்ப்பை வழங்குவதற்கான காலம் நெருங்கியுள்ளதாகவும் எனினும், நிஷங்க சேனாதிபதி, நந்தன தியபலனகே ஆகிய சந்தேகநபர்கள் இரகசியமான முறையில் வௌிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பிலும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்துள்ளார்.