பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

by Staff Writer 05-07-2019 | 9:27 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பலாலி விமான நிலையம் மூன்று கட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. முதற்கட்ட பணிகளுக்காக சுமார் 2 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக 2250 மில்லியன் ரூபா தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஊடாக 1950 மில்லியன் ரூபாவும் இந்திய நிதியுதவியின் ஊடாக 300 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. விமான நடவடிக்கை செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் பிரதான ஓடுதளத்தின் முதலாவது 950 மீட்டர் மார்க்கம் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் குறித்த பிரதான ஓடுதளத்தின் 1.5 கிலோமீட்டர் மார்க்கம் மேலதிகமாக நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதனை பூர்த்தி செய்த பின்னர், பலாலி விமான நிலையத்தில் இருந்து 1800 சதுர கிலோமீட்டர் வரையான ஆகாய மார்க்கத்தில் விமானங்கள் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டும். திட்டத்தின் இறுதிக்கட்டத்தின் போது, பிரதான விமான ஓடுதளத்தின் 2.3 கிலோமீட்டர் மார்க்கம் முற்றாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அந்த கட்டம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், AL – 320 மற்றும் AL – 321 ரக விமானங்கள் பலாலி விமான நிலையத்தில் இருந்து பிராந்திய விமான நிலையங்களுக்கு பயணிக்கவுள்ளன. இதேவேளை, பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள், இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவரின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்படும் நிலையில், அங்கிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மயிலிட்டி பிரதேச காணிகளை ஆராய்வதற்காக அமெரிக்க அரசாங்கத்தின் தூதுக்குழுவொன்று இன்று வருகை தந்திருந்தது. அமெரிக்க செனட் சபையின் அதிகாரிகள் இருவர், யாழ்ப்பாணம் - மயிலிட்டி பகுதிக்குச் சென்று காணிகளை ஆராய்ந்துள்ளனர். அமெரிக்க செனட் சபை அதிகாரி Damian Murphy மற்றும் கொள்கை தொடர்பான அதிகாரி Yelda Kazimi ஆகியோர் இவ்வாறு வருகை தந்துள்ளனர். தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் இருவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, மீள்குடியேற்ற பிரதேசமான மயிலிட்டி வடக்கு முலவைக் கிராமத்தையும் பார்வையிட்டனர். யாழ். மாவட்ட செயலகத்திற்கு கிடைத்த கடிதமொன்றில் குறிப்பிடப்பட்டிருந்த வகையில், அமெரிக்க குழுவினருக்கு காணிகளை ஆராய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தியதாக இது தொடர்பில் வினவிய போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவஶ்ரீ கூறினார். அமெரிக்க குழுவினருக்கான வசதிகளை தாம் வழங்கியதாக யாழ். மேலதிக அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். இதற்கு முன்னரும் இந்த குழுவினர் இவ்வாறு வருகை தந்து, ஆராய்ந்ததாகவும் அவர் கூறினார்.