ஔிபரப்பு உரிம பண மோசடி: குற்றஞ்சாட்டப்பட்டவர் தொடர்ந்தும் பணியில்

by Staff Writer 05-07-2019 | 8:58 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்க கிரிக்கெட் விஜயத்திற்காக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 33 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் கிடைக்காமை குறித்து, ஒளிபரப்பு உரிமையைப் பெற்ற இந்தியாவின் Sony Pictures Networks நிறுவனத்திற்கு இலங்கை கிரிக்கெட் செயலாளர் அனுப்பிய கடிதத்திற்கு கிடைத்த பதில் தொடர்பாக நேற்று (04) நியூஸ்ஃபெஸ்ட் தகவல் வெளியிட்டிருந்தது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பிரிவு தலைவர் வழங்கிய உத்தரவுகளுக்கு அமைய குறித்த பணத்தை தமது நிறுவனம் செலுத்தி முடித்துள்ளதாக பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் எழுத்து மூல ஆவணங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளின் கையொப்பங்களுடனான பிரதிகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அதன் பிரகாரம் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை கிரிக்கெட் நிறுவன செயற்பாட்டுப் பிரிவிற்கு சைபர் தாக்குதல் நடத்தப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் செயற்பாட்டுப் பிரிவின் சட்ட விசாரணை தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட நிதிப்பிரிவு தலைவருக்கு அடுத்து பொறுப்பு வகிக்கும் வைப்பிலிடும் நபர் இன்னும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பணிபுரிகின்றார். என்றாலும், விசாரணை முடிந்து தீர்வு கிடைக்கும் வரை குற்றஞ்சாட்டப்படுவோர் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதே பொதுவான வழக்கமாகும். ஆனால், அவ்வாறான வழிமுறை பின்பற்றப்படாமல் குறித்த நபருக்கு 25,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறான நிலைமையின் கீழ் ஒளிபரப்பு உரிமைக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணம் தொடர்பாக விசாரணை நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெற்றதென எதிர்பார்க்க முடியுமா?