ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2019 | 7:35 am

Colombo (News 1st) ரயில்வே ஊழியர்கள் நேற்று (3ஆம் திகதி) நள்ளிரவு முதல் மீண்டும் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழியர் ஒருவர் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளர் மேற்கொண்ட ஒழுக்காற்று நடவடிக்கையைத் தடுப்பதற்கு, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அழுத்தம் பிரயோகிப்பதாகத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

பணிப்பகிஷ்கரிப்பினால் இன்று (4ஆம் திகதி) காலை முதல் எந்தவொரு ரயிலும் சேவையில் ஈடுபடவில்லை என, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி, இன்று முற்பகல் அமைச்சருடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக டிலந்த பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.

விதிமுறைகளை மீறிய தொழிற்சங்க தலைவரை பணிநீக்கம் செய்யுமாறு ரயில்வே பொது முகாமையாளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு அண்மையில் அறிவித்திருந்தார்.

எனினும், அமைச்சின் செயலாளர் இதற்கு எவ்வித பதிலையும் தெரிவிக்காதமையால் தொழிற்சங்க தலைவரை பணிநீக்கம் செய்ய முடியாது எனின் தம்மை பொது முகாமையாளர் பதவியிலிருந்து நீக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு டிலந்த பெர்னாண்டோ கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ. ஜயம்பதியிடம் வினவியபோது, தொழிற்சங்க உறுப்பினரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு பொது முகாமையாளருக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ. ஜயம்பதி, ரயில்வே பொது முகாமையாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள ரயில் சேவையைத் தடையின்றி முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு பொது முகாமையாளருக்குக் காணப்படுவதாக, அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரயில் பயணத்திற்குத் தேவையான அலுவலர்களை ஈடுபடுத்தல், அறிவித்தலின்றி சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதும் அவரின் பொறுப்பாகும் என செயலாளர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்