கொலன்னாவைக்கான எண்ணெய் குழாய்தொகுதி மீள புனரமைப்பு

இடைநிறுத்தப்பட்ட எண்ணெய்க் குழாய்த் தொகுதி புனரமைப்புப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

by Staff Writer 04-07-2019 | 8:33 AM
Colombo (News 1st) தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிட்டு, கொலன்னாவை பகுதிக்கு எண்ணெய் கொண்டுசெல்லும் பழைய எண்ணெய்க் குழாய்த் தொகுதியைப் புனரமைக்கும் பணிகளை இன்று (4ஆம் திகதி) முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மீண்டும் தமக்கு எவ்வித அழுத்தங்களும் விடுக்கப்படாது என தாம் நம்புவதாக, பெற்றோலியத் துறை கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றதிகார சங்கங்களின் பொருளாளர் மனு ஜயவர்தன கூறியுள்ளார். கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதரும் கப்பல்களிலிருந்து கொலன்னாவைக்கு எண்ணெய் கொண்டுசெல்லும் பழைய குழாய்த் தொகுதிக்குப் பதிலாக புதிய குழாய்த் தொகுதியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் அண்மையில் ஆரம்பமானது. குறித்த குழாய்க் கட்டமைப்பின் இறுதி 140 மீற்றர் குழாயைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது, கடந்த 25ஆம் திகதி மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவினர் அந்த நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததை அடுத்து பணிகள் இடைநிறுத்தப்பட்டன. குழாய்த் தொகுதி காணப்படும் பகுதியின் இரு மருங்கிலும் வாழும் மக்களுக்கு நட்டஈடு அல்லது இருப்பிடங்கள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த விடயத்தில் தலையீடு செய்துள்ளார். இதனையடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள், மின்சார சபைக்கு எண்ணெய் வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்தி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.