Batticaloa Campus குறித்த பரிந்துரை அறிக்கையை ஆராய அமைச்சரவை உபகுழுவை நியமிக்க தீர்மானம்

by Staff Writer 03-07-2019 | 1:59 PM
Colombo (News 1st) Batticaloa Campus குறித்து கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரை அறிக்கையை ஆராய்வதற்கு அமைச்சரவை உப குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 4 அமைச்சர்களை உள்ளடக்கி இந்த உபகுழு நியமிக்கப்படவுள்ளது. நிதி, நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழி, சமூக வலுவூட்டல் மற்றும் இந்துமத அலுவல்கள், அபிவிருத்தி மற்றும் உபாய மார்க்கம், சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகியவற்றின் அமைச்சர்களே இந்தக் குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர். 'Batticaloa Campus' தொடர்பில் கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரை அறிக்கை நேற்றைய தினம் (2ஆம் திகதி) பரிசீலிக்கப்பட்டது. இதன் பின்னரே அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, 'Batticaloa Campus' தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக் குழுவில் ஆஜராகி இன்று முற்பகல் வாக்குமூலம் வழங்கியிருந்தார். சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதன்போது, 'Batticaloa Campus' தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.