50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு: தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றி வரும் அரசாங்கம்

by Staff Writer 03-07-2019 | 5:59 PM
Colombo (News 1st) 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு: தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றி வரும் அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதற்குப் பதிலாக இது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவும் அடங்குகிறார். தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீரவும் இந்த குழுவில் அடங்குகிறார். எனினும், அரசாங்கம் இதற்காக குழு அமைப்பதால் ஒன்றும் நடக்கப் போவதில்லையென அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு எப்போது கூடி, எப்போது கொடுப்பனவை வழங்கப் போகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது காலம் கடத்தும் செயல் எனவும், குழுவின் அறிக்கை வெளியாகும் போது இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலமும் நிறைவடைந்து விடும் என வீ. இராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியும் என்றால், இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதில் பாரிய பங்களிப்பு செய்த தோட்டத்தொழிலாளர்களுக்கு இந்த அரசாங்கத்தினால் 50 ரூபா வழங்க முடியாமல் போயுள்ளதா எனவும் அவர் வினவியுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க கடந்த மார்ச் 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதற்காக 1.2 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்குவதாகக் கூறி அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது.