ஹேமசிறி, பூஜித் ஆகியோர் கொலைக் குற்றங்களை இழைத்துள்ளதாக சட்ட மா அதிபர் நீதிமன்றுக்கு அறிவிப்பு

by Staff Writer 03-07-2019 | 8:40 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். தண்டனை சட்டக்கோவைக்கமைய அவர்கள் இருவரும் கொலை மற்றும் அதற்கு உதவியமை ஆகிய குற்றங்களை இழைத்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டது. சந்தேகநபர்கள் தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியுள்ளதாக வழக்கு விசாரணையின் போது பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் துசித் முதலிகே தெரிவித்தார். தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் எழுத்து மற்றும் வாய்மூலம் புலனாய்வுப் பிரிவூடாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதனைத் தடுப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மன்றில் குறிப்பிட்டார். 30 வருட யுத்த அனுபவமுள்ள நாட்டில், பாதுகாப்பிற்குப் பொறுப்பாகவிருந்த இந்த சந்தேகநபர்கள் தற்கொலை குண்டுத் தாக்குதலின் பாரதூரத்தன்மை தொடர்பில் அறிந்திருக்க வேண்டும் என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் தெரிவித்தார். கொலைச்சம்பவம் இடம்பெறவுள்ளது என அறிந்து அல்லது உறுதியான தகவல் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்காமையூடாக, தண்டனை சட்டக்கோவையின் 294ஆம் சரத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளமை தௌிவாவதாக முதலிகே மன்றில் குறிப்பிட்டார். சந்தேகநபர்கள் கடமைகளை நிறைவேற்றியிருந்தால், தாக்குதல் நடத்திய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஷிமை கைது செய்திருக்க முடியும் என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் கூறினார். குறைந்தபட்சம் தாக்குதல் நடத்தப்படவுள்ளது என குறிப்பிடப்பட்ட இடங்களிலிருந்து மக்களை வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்கள், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், வேறு வழிமுறைகளைப் பின்பற்றி சமயத் தலைவர்கள், முப்படை தலைமை அதிகாரிகள், சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் மக்களை இலகுவாக தௌிவுபடுத்தியிருக்க முடியும் என்றும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார். ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகிய சந்தேகநபர்கள் இவ்வாறான விடயங்களை முன்னெடுக்கவில்லை என சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மன்றில் சுட்டிக்காட்டினார். தமக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் தொடர்பில் பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு தலைமை அதிகாரிகள் அல்லது முப்படைத் தளபதிகளுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையூடாக, தமது கடமைகளை இருவரும் நிறைவேற்றத் தவறியுள்ளதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் தெரிவித்தார். இரண்டாவது சந்தேகநபரான பூஜித் ஜயசுந்தர தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று காலை வேளை புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவல்களுக்கமைய நடவடிக்கை எடுக்காது, தாக்குதலின் பின்னரே அது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளமை விசாரணைகளூடாக தெரியவந்துள்ளதாகவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் தெரிவித்தார். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு ஏப்ரல் 16 ஆம் திகதி இரவு காத்தான்குடி பகுதியில் குண்டை வெடிக்கச் செய்ததாகவும், அது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் முன்னோடி நிகழ்வு என புலனாய்வுப் பிரிவு பூஜித் ஜயசுந்தரவிற்கு அறிக்கையிட்டிருந்ததாகவும் துசித் முதலிகே நீதிமன்றுக்கு அறிவித்தார். அரச புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியூடாக அனைத்து புலனாய்வுத் தகவல்களும் பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கப்படும் என பூஜித் ஜயசுந்தர அறிந்திருந்ததாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன குறிப்பிட்டார். புலனாய்வுப் பிரிவு அது குறித்து உரிய பிரிவுகளுக்கு அறிவித்திருந்ததாக உறுதியாகக் கூற முடியுமா என நீதவான் லங்கா ஜயரத்ன சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் வினவினார். தமக்குக் கிடைத்த ஆலோசனைக்கமைய அது அவ்வாறே இடம்பெற்றதாக அதற்கு பதிலளிக்கப்பட்டது. கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து பூஜித் ஜயசுந்தர, தேசிய பாதுகாப்பு பேரவைக் கூட்டங்களில் கலந்துகொள்வது ஜனாதிபதியால் தடுக்கப்பட்டிருந்ததாக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி மன்றில் குறிப்பிட்டார். இவ்வாறான நிலைமையில், தமக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் குறித்து பூஜித் ஜயசுந்தர உடனடியாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நால்வருக்கு அறிவித்ததாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். இந்த விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அந்த தினத்தில் சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டார். பிணை வழங்குமாறு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான உத்தரவு அந்த தினத்தில் பிறப்பிக்கப்படும் எனவும் நீதவான் அறிவித்தார். சந்தேகநபர்களின் சீரற்ற உடல்நிலைக்கமைய அவர்கள் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை என சிறைச்சாலை அத்தியட்சகர் மன்றுக்கு எழுத்து மூலம் அறிவித்தார். முதலாவது சந்தேகநபரான பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் இரண்டாவது சந்தேகநபரான பூஜித் ஜயசுந்தர நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையிலும் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.