நாளை முன்னெடுக்கவிருந்த பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

ரயில்வே ஊழியர்களின் நாளைய பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

by Staff Writer 03-07-2019 | 1:41 PM
Colombo (News 1st) போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் ரயில்வே பொதுமுகாமையாளருக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினைகளினால், ரயில்வே பொதுமுகாமையாளர் பதவி விலகுவதற்குத் தீர்மானித்திருந்ததாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து தமக்கு அறியக்கிடைத்ததை அடுத்து, இதற்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, நாளை (4ஆம் திகதி) நள்ளிரவு முன்னெடுக்கப்படவிருந்த 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை சட்ட ஆலோசனையின் பிரகாரம் கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாடு தொடர்பில் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக அதிகாரிகளிடம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ரயில்சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்திய போதிலும், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை தொடர்பில், அதில் பங்கேற்ற ஊழியர்களிடம் கருத்துக்களை கோரியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் மேலதிக பொதுமுகாமையாளரின் தலைமையில் எழுத்துமூலம் குறித்த ஊழியர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்திய நிலையில், ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.