சஹ்ரானின் போதனையில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் பிணையில் விடுவிப்பு

by Staff Writer 03-07-2019 | 7:22 PM
Colombo (News 1st) தடை செய்யப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமின் போதனையில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் I.N.ரிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கை முன்னெடுப்பதற்கான காரணங்கள் இல்லை என பொலிஸார் மன்றுக்கு அறிவித்துள்ளனர். இதன்போது, சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, சந்தேகநபரான இளைஞரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், வழக்கு முடிவடையும் வரை மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. சந்தேகநபர் வௌிநாடு செல்வதற்கும் நீதவான் தடையுத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு இன்று அழைத்துச்செல்லப்பட்டனர். இராணுவத்தினர் மற்றும் பொரிஸாரின் சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்ட மருதமுனை பகுதியைச் சேர்ந்த நபரும் இன்று அழைத்துச்செல்லப்பட்டிருந்தார். சாய்ந்தமருது தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் இவர்களிடம் மரண விசாரணை நடத்தப்பட்டது. எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.