அமெரிக்க உடன்படிக்கை தொடர்பில் தௌிவுபடுத்துமாறு அரசாங்கத்திடம் வணிக சபை கோரிக்கை

by Staff Writer 03-07-2019 | 8:13 PM
Colombo (News 1st) SOFA மற்றும் Millennium Challenge Corporation உடன்படிக்கைகள் தொடர்பான நிலைப்பாட்டினை தௌிவுபடுத்துமாறு இலங்கை வணிக சபை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. இந்த உடன்படிக்கைகள் தொடர்பிலான கொள்கை குறித்து வௌிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உத்தேச SOFA மற்றும் Millennium Challenge Corporation உடன்படிக்கைகள் தொடர்பில் தமது உறுப்பினர்களும் மக்களும் அதிகக் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை வணிக சபை தெரிவித்துள்ளது. உடன்படிக்கை தயாரித்தல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துதல் என்பன பாராளுமன்றத்தின் அனுமதியுடன் செயற்படுத்தப்பட வேண்டுமென வணிக சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், Millennium Challenge Corporation உடன்படிக்கை ஊடாக நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Alaina Teplitz-ஐ சந்தித்தபோது, அந்தப் புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Millennium Challenge Corporation உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதிக்கு விடயங்களைத் தௌிவுபடுத்த பல தடவைகள் முயற்சித்த போதிலும் இரண்டு மாதங்கள் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தி தொடர்பில் காணப்படும் இடையூறுகள் குறித்து ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டுமெனவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். Ricardo Hausmann மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக குழுவுடன் இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் இணைந்து இந்த உடன்படிக்கையை தயாரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு இவர்கள் எவரும் அழைக்கப்படவில்லை என்பதுடன், இவை தொடர்பில் குறிப்பிடப்படவுமில்லை எனவும் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, Millennium Challenge Corporation தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த போதிலும் பின்னர் அது இரத்து செய்யப்பட்டது. இராணுவத்தை நிலைநிறுத்தும் உடன்படிக்கை எனப்படும் SOFA மூலம் அமெரிக்க இராணுவத்தினர் நாட்டின் பொதுச்சட்டத்திற்கு புறம்பாக நுழைந்து தூதரக சலுகைகளை அனுபவித்து சுதந்திரமாக நடமாடும் சந்தர்ப்பம் கிடைப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த உடன்படிக்கை சுற்றுலா இராணுவ உடன்படிக்கை என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதுவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க இராணுவத்தினர் சுதந்திரமாக நாட்டினுள் நடமாடும் வசதி இதன்மூலம் ஏற்படுத்தப்படுமா என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. Millennium Challenge Corporation எனப்படும் அமெரிக்க நிறுவனம் 480 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு தயாராகின்றது. நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பினை அபிவிருத்தி செய்தல் மற்றும் காணி சட்டங்களை மாற்றுவதற்காக இந்த நிதி கிடைக்கின்றது. கொழும்பு துறைமுகம் மற்றும் திருகோணமலை துறைமுகத்தை இணைத்து போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் பொருளாதார கேந்திர நிலையத்தை உருவாக்குதல் என்பன இதன் நோக்கம் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். SOFA உடன்படிக்கை ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்கும் இராணுவத்தினர் திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகத்தை உபயோகித்து தமக்குத் தேவையான பொருட்களையும் சேவைகளையும் கொண்டு செல்ல முயல்வதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். SOFA எனப்படுவது கையகப்படுத்துதல் அல்லது மாற்று சேவை உடன்படிக்கையாகும். இதனூடாக அமெரிக்க இராணுவத்தினர் தமக்குத் தேவையான பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க விமானம், தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ கப்பலுக்கு இந்த உடன்படிக்கை ஊடாகவே பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 2007 ஆம் ஆண்டு இந்த உடன்படிக்கை முதலில் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், 2017 ஆம் ஆண்டு மீண்டும் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.