ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2019 | 9:05 pm

Colombo (News 1st) இன்று நள்ளிரவு முதல் மீண்டும் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

ஊழியர் ஒருவர் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளர் மேற்கொண்ட ஒழுக்காற்று நடவடிக்கையைத் தடுப்பதற்கு, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அழுத்தம் பிரயோகிப்பதாகத் தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வினவுவதற்கு ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோவை தொடர்புகொள்வதற்கு முயன்ற போதிலும், அவர் அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை.

தொழிற்சங்க உறுப்பினரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு பொது முகாமையாளருக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ.ஜயம்பதி கூறினார்.

இதில் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க கூறினார்.

இதேவேளை, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ.ஜயம்பதி, ரயில்வே பொது முகாமையாளருக்கு நேற்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள ரயில் சேவையைத் தடையின்றி முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு பொது முகாமையாளருக்கு காணப்படுவதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரயில் பயணத்திற்கு தேவையான அலுவலர்களை ஈடுபடுத்தல், அறிவித்தலின்றி சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுத்தல் என்பன அவரின் பொறுப்பாகும் என செயலாளர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சம்பளம் மற்றும் பதவி உயர்வு பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு ரயில்வே தொழிற்சங்கங்கள் கடந்த இரு வாரங்களில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டன.

அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டமை குறித்து, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் அடுத்தகட்ட விசாரணைகளுக்காக தேவையேற்படின் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளர் பதிவு செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்