திருகோணமலையில் ஐவர் சுட்டுக்கொலை: 13 சந்தேகநபர்களும் விடுதலை

திருகோணமலையில் ஐவர் சுட்டுக்கொலை: 13 சந்தேகநபர்களும் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2019 | 5:37 pm

Colombo (News 1st) திருகோணமலையில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 சந்தேகநபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் 12 பேர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 13 பேரே இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை திருகோணமலை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

சந்தேகநபர்களுக்கு எதிராக கொலை, கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கில் சாட்சியமளிப்பதற்காக 36 சந்தேகநபர்கள் இன்று அழைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களில் 8 பேர் ஆஜராகவில்லை.

இன்று மன்றில் ஆஜராகாத சாட்சியாளர்களில், சம்பவத்தை நேரில் கண்ட மற்றும் காயமடைந்த 4 ஆம், 8 ஆம் இலக்க சந்தேகநபர்களும் அடங்குவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு மன்றுக்கு அறிவித்தது.

அந்த இருவரும் சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் வசிப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மன்றில் தெரிவித்தனர்.

சாட்சியங்களை கருத்திற்கொண்ட திருகோணமலை பிரதம நீதவான் H.M.மொஹமட் ஹம்சா, இந்த வழக்கை தொடர்ந்தும் நடத்துவதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை என அறிவித்தார்.

இதனால், இந்த வழக்கிலிருந்து 13 பேரையும் விடுதலை செய்வதாக நீதவான் உத்தரவிட்டார்.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் 5 இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்